யாழில்.நடைபெற்று வரும் மாபெரும் உதைப்பந்தாட்ட போட்டியில் பிரதான அனுசரணையாளர்கள், பங்காளர்கள் மற்றும் ஊடக அனுசரணையாளர்கள் என எதனையும் யாருக்கும் வழங்கவில்லை என போட்டியினை நடாத்தும் வடகிழக்கு லீக் முறையிலான சுற்றுப்போட்டியின் (NEPL) குழு உறுப்பினர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர்.
குறித்த சுற்றுபோட்டி தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை திருநெல்வேலி பகுதியில் உள்ள விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.
அதில் குறித்த சுற்று போட்டியினை நடாத்தும் என்.ஈ.பி.எல். குழு உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில் ,
யாழில் நடைபெற்று வரும் மாபெரும் உதைப்பந்தாட்ட போட்டியானது தெற்காசியாவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. எதிர்காலத்தில் தெற்காசியாவில் மிக பெரிய சுற்றுப்போட்டியாக அதனை நடத்த உள்ளோம்.
வடக்கு கிழக்கில் உள்ள உதைப்பந்தாட்ட வீரர்களின் திறனை வளர்க்கும் முகமாகவே இந்த சுற்று போட்டியினை நடாத்த தீர்மானித்தோம். அதற்காக தனியாக சில நிறுவனங்களை அணுகி அவர்களுடன் பேசிய போது அவர்கள் அணிகளை வாங்கினார்கள்
அந்நிலையில் குறித்த சுற்றுப்போட்டி நடக்கும் போது ஓரிரு அணிகளை வாங்கிய நிறுவனங்களின் விரும்ப தகாக செயல்களால் சில பிரச்சனைகளை எதிர்கொண்டோம். இதுவரையில் இந்த சுற்றுப்போட்டியில் எந்த நிறுவனமும் அனுசரணையாளராகவோ, பங்காளர்களாகவோ இல்லை.
வடக்கு கிழக்கு சேர்ந்த 12 அணிகள் இந்த சுற்று போட்டியில் கலந்து கொள்கின்றன யாழ்.மாவட்டத்தினை பிரதி நிதித்துவ படுத்தி நான்கு அணிகளும் , மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இரண்டு அணிகளும், கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்தவப்படுத்தி ஒரு அணியும், முல்லைத்தீவு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு அணியும் , வவுனியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு அணியும் , திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு அணியும் , மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்தி ஒரு அணியும், அம்பாறை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்தி ஒரு அணியும் , ஆக 12 அணிகள் இந்த போட்டியில் விளையாடுகின்றன.
இந்த போட்டியில் வெளிநாட்டு வீரர்களும் விளையாடுகின்றார்கள். ஆனாலும் மாவட்ட ரீதியில் நான்கு வீரர்கள் கட்டாயம் விளையாட வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. வெளிநாடு மற்றும் வெளிமாவட்ட வீரர்கள் விளையாடலாம்.
வெளிநாட்டு வீரர்கள் மற்றும் வெளிமாவட்ட வீரர்கள் சிலர் திறமையானர்வர்கள். அவர்களுடன் விளையாடுவதன் மூலம் உள்ளூர் வீரர்கள் சில நுட்பங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் சில அனுபவங்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த சுற்றுப்போட்டிக்கு இதுவரைக்கும் பிரதான அனுசரணையாளர்கள் , பங்காளர்கள், மற்றும் ஊடக அனுசரணையாளர்கள் என எதனையும் யாருக்கும் வழங்க வில்லை. பலரை அதற்காக தொடர்பு கொண்டு உள்ளோம்.
சில ஊடக நிறுவனங்கள் அணிகளின் உரிமையார்களாகவே உள்ளனர் அவர்கள் பங்காளர்களோ , அனுசரணையாளர்களோ அல்ல. அவர்கள் வெறுமன அணிகளின் உரிமையாளர்கள் மாத்திரமே.
முதல் பரிசு 50 இலட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசு 30இலட்சம் ரூபாயும், மூன்றாம் பரிசு 15 இலட்ச ரூபாயும் நான்காம் பரிசு 05 இலட்ச ரூபாயும் என அறிவித்துள்ளோம். இந்த சுற்று போட்டியின் இறுதி போட்டி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 26ஆம் திகதி நடாத்துவதற்கு தீர்மானித்து உள்ளோம். என அவர்கள் தெரிவித்தனர்.