ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தடைகளில் இருந்து ஐரோப்பிய நிறுவனங்களுக்கு விலக்களிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது. ஈரான் மீது அதிகபட்ச அழுத்தத்தை செலுத்த அமெரிக்கா விரும்புவதால் ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கையை நிராகரிப்பதாக அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு நன்மை பயக்கும் என்றால் மட்டுமே விலக்கு அளிக்கப்படும் எனவும் அவர் ஐரோப்பிய நாடுகளுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக நிதிசார்ந்த அழுத்தத்தை ஈரான் அரசுக்கு எதிராக உருவாக்க விரும்புவதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டு கையெழுத்தான ஈரான் அணுத் திட்டம் தொடர்பான சர்வதேச ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிய பின்னர் கடந்த மே மாதம் இந்தக் கடுமையான தடைகள் விதிக்கப்பட்டன. அமெரிக்கா விதித்துள்ள புதிய வர்த்தகத் தடைகளால் பல நூறு கோடி டொலர் மதிப்புள்ள வர்த்தகம் பாதிக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் அஞ்சுகின்றமை குறிப்பிடத்தக்கது