மாகாண சபையின் எதிர்கட்சி உறுப்பினர் வை.தவநாதன் தெரிவிப்பு – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்….
வடமாகாணசபையின் ஆளுங்கட்சியான தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் சரியாக செயற்பட்டிருந்தால், இன்றைக்கு வடமாகாணசபை கேலிக்குரியதாக மாறியிருக்காது. இன்று இந்த சபை கேலிக்குரியதாக மாறியிருப்பதற்கு கூட்டமைப்பின் தலைவர்களே பொறுப்பாளிகள். என வடமாகாணசபை எதிர்க்கட்சி உறுப்பினர் வை.தவநாதன் தெரிவித்துள்ளார்.
வடமாகாணசபை அமைச்சர்கள் தொடர்பான சர்ச்சை குறித்து ஆராய்வதற்காக இன்று திங்கட்கிழமை வடமாகாணசபையில் விசேட அமர்வு ஒன்று இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த அவர் ,
வடமாகாணசபை ஆளுங்கட்சியின் தலைவர்கள் சரியாக செயற்பட்டிருந்தால் ஆயுதப்போராட்டங்கள் மூலம் பெறப்பட்ட குறைந்தபட்ச அதிகாரங்களை கொண்ட மாகாணசபை இன்று கேலிகுரியதாக மாறியிருக்காது.
இவ்வாறு கேலிக்குரியதாக மாற்றிய பொறுப்பு ஆளுங்கட்சி தலைவர்களையே சேரும். இன்றும்கூட ஆளுங்கட்சிக்குள் இருக்கும் கட்சி பிரச்சினைகள்தான் இப்படி மாறியிருக்கின்றது. ஆளுங்கட்சி கொரடாவாக யார் இருக்கிறார்கள்?
மேலும் ஆளுங்கட்சி கூட்டங்களை ஒழுங்காக நடாத்தியிருந்தால் இங்கே பேசப் படும் பல பிரச்சினைகளை பேசவேண்டிய அவசியம் வந்திருக்காது. இன்று பல பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக குடியேற்றங்கள் நடக்கின்றன.
இங்கே நீதியரசர், பல சட்டத்தரணிகள், அரச நிர்வாகிகள் இருக்கின்றீர்கள். ஆனால் குடியேற்றங்கள் குறித்து எவரும் கவனத்தில் எடுப்பதாக இல்லை. இன்று அமைச்சர்கள் தங்கள் நலன்களுக்காக மக்களை பாதிக்க விட்டிருக்கின்றார்கள்.
வெளியே மக்கள் கேட்கிறார்கள் வடமாகாணசபை எப்போது கலைக்கப்படும் என கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். வடமாகாணசபை கடந்த 4 வருடங்கள் 8 மாதங்களில் எதனையுமே திறம்பட செய்யவில்லை. என குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் இப்போது இந்த அமைச்சர்கள் பிரச்சினை வந்துள்ளதால் மிகுதி காலத்திலும் எதுவும் பயனுள்ளதாக நடக்காது என்றார்.