காவிரியில் கழிவு நீர் கலக்கும் விவகாரம் தொடர்பில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் உச்சநீதிமன்றில் நேற்றையதினம் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் பல இடங்களில் காவிரி கரையில் உள்ள சில நகரங்கள் மற்றும் அந்த மாநிலத்தை சேர்ந்த தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் காவிரி ஆற்றில் அதிக அளவில் கலக்கின்றன. வருடாந்தம் சுமார் 5 லட்சத்து 40 ஆயிரத்து 200 மில்லியன் லிட்டர் கழிவுகள் கர்நாடகாவிலிருந்து காவிரி மூலம் தமிழகத்துக்கு வருகிறது.
அபாயகரமான கழிவுகளோடு தமிழகத்துக்கு வரும் காவிரி நீரினால் விளையும் பயிர்களில் இரசாயனப்பொருள்களின் தன்மை அதிகம் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் இதனால் காவிரி கரையோரம் வாழ்பவர்கள் பலவிதமான நோய்களுக்கு ஆளாகிறார்கள். எனவே, தொழிற்சாலைகள் வெளியேற்றும் பல்வகையான கழிவுகளை நேரடியாக ஆற்றில் கலக்கவிடாமல் கழிவுகள் கலந்த தண்ணீரை சுத்திகரித்த பின்னர் ஆற்றில் கலக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு கோரி உ;சநீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று விசாரணைக்கு வந்துள்ள நிலையில் காவிரி உருவாகும் இடத்தில் கழிவுகள் எதுவும் கலப்பது இல்லை என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்தநிலையில் இந்த அறிக்கை தொடர்பில் தமிழக மற்றும் கர்நாடக அரசுகள் 2 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.