திறந்த அரசாங்க பங்குடமை தலைவர்கள் சந்திப்பில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜோர்ஜியா பயணமானார். 6வது உலக வனப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு இடம்பெறும் உலக வனப் பாதுகாப்பு குழுவின் 24வது கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இத்தாலி சென்றிருந்த ஜனாதிபதி அந்தப் பயணத்தை நிறைவு செய்து, இன்று (17) அதிகாலை ஜோர்ஜியாவின் ஷோட்டா ரஸ்ட்டாவெளி திபிலிசி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்.
விமான நிலையத்தில் அந்நாட்டின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஜோர்ஜ் சர்வாசிட்சே உள்ளிட்ட பிரதிநிதிகள் ஜனாதிபதியை வரவேற்றனர்.
திறந்த அரசாங்க பங்குடமை மாநாடு நாளை (18) முற்பகல் திபிலிசி மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில் நாளைய தினம் மாநாட்டில் உரையாற்றவுள்ள ஜனாதிபதி திறந்த பங்குடமை நோக்கங்களை அடைந்துகொள்வதற்கு இலங்கை இதுவரையில் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்கவுள்ளார்.
திறந்த அரசாங்க பங்குடமை 2011ஆம் ஆண்டு சர்வதேச மட்டத்தில் முறையாக தாபிக்கப்பட்டதுடன், 2015ஆம் ஆண்டு இலங்கையும் அதில் இணைந்துகொண்டது. இலங்கை இவ்வமைப்பில் உறுப்புரிமை பெற்றுள்ள முதலாவது தெற்காசிய நாடாகும்.
தற்போது உலகில் 75 நாடுகள் திறந்த அரசாங்க பங்குடமையில் உறுப்புரிமை பெற்றுள்ளன.
இந்த மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தில் ஜனாதிபதியுடன் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் செனவிரத்ன மற்றும் பிரதி அமைச்சர் லசந்த அழகியவன்ன ஆகியோரும் இணைந்துகொண்டுள்ளனர்.