மட்டக்களப்பில் பௌத்த மத்திய நிலையம் அமைக்க அனுமதிக்க கூடாது என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் அரசாங்க அதிபருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் புணாணை கிழக்கு கிராம அதிகாரி பிரிவை சேர்ந்ததாக கடந்த 1985ம் ஆண்டுக்கு முன் கிட்டத்தட்ட ஐந்து சிங்கள குடும்பங்கள் புணாணை புகையிரத நிலையத்தை அண்மித்த பகுதியில் வாழ்ந்துள்ளனர்.
இவர்கள் யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து கடவத்தமடு என்னும் பகுதிக்கு சென்று அங்கு அரசாங்கத்தின் மானிய வீடு, மானிய உணவுப் பொருள் உதவியை பெற்று வாழ்ந்து விட்டு தற்போது திம்புலாகலை பிக்குவின் ஆதரவுடனும், இராணுவத்தின் ஆதரவுடனும் புணாணை புகையிர நிலையத்துக்கு முன் விநாயகர் ஆலயத்தை அண்மித்து ஒரு விகாரை அமைத்து விட்டு மீள்குடியேற்றம் என்ற காரணத்தில் 25 சிங்கள குடும்பங்களுக்கு மேல் குடியேறியுள்ளனர்.
இத்திட்டமிட்ட குடியேற்றம் வனபரிபாலன திணைக்கள ஆதரவுடனும், வாகரை பிரதேச செயலகத்தின் உதவி மூலமும், மாகாண காணி பணிப்பாளரின் திட்டமிட்ட சிங்கள இன குடியேற்ற மனப்பாங்குடனும் நடைபெற்றுள்ளது. இது கண்டிக்கத்தக்க விடயமாகும்.
இவ்வேளை மீள்குடியேற்றம் என்ற ரீதியில் அங்கு சிங்கள குடியிருப்புக்களை அமைத்ததுடன், தற்போது உயர்கல்வி அமைச்சின் ஆதரவுடனும், பௌத்த மதவிவகார அமைச்சின் ஆதரவுடனும் பௌத்த மக்களுக்கான மத்திய நிலையம் அமைக்க முயற்சிக்கின்றனர். இவ்விடயத்தை ஏற்க முடியாது காரணம் இது திட்டமிட்ட ஒரு சிங்கள மயமாக்கல் முயற்சியாகும்.
ஆகவே இச்செயற்பாட்டை தடுத்து நிறுத்த மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் ஒன்று கூடலின் நிகழ்ச்சி நிரலில் இதையும் ஆராயும் முகமாக இணைத்துக் கொள்ளுமாறு வேண்டுவதுடன், இச்செயற்பாட்டுக்கு தாங்கள் அனுமதி வழங்க வேண்டாம் என்றும் சீனித்தம்பி யோகேஸ்வரன் மேலும் கூறியுள்ளார்.