சிரியாவில் எயின் அல் டினே என்ற கிராமத்தின் மீது பீப்பாய் குண்டு போடப்பட்டதில் 10-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிரியாவில் அரச படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்குமிடையில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் சிரியாவின் தென் மேற்கு பகுதியில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலுள்ள உள்ள ஒரு கிராமத்தின் மீது ரஸ்யாவின் துணையுடன் அரச படைகள் நேற்று மேற்கொண்ட குண்டுவீச்சில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
எனினும் அங்கு இயங்கி வருகிற மருத்துவ அறக்கட்டளை அமைப்பு குறித்த கிராமத்தின் மீது பீப்பாய் குண்டு போடப்பட்டதில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 35 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் பெண்கள், குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
அண்டை கிராமங்களில் அரச படைகளின் தாக்குதல் காரணமாக இடம்பெயர்ந்து எயின் அல் டினே கிராமத்துக்கு வந்த மக்கள்தான் மேற்படி பீப்பாய் குண்டுவீச்சில் சிக்கிக்கொண்டதாக அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன