மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு உதவும் மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களுடன் தொடர்புடைய இணையத்தளங்களை நவீன தொழிநுட்பத்தின் கீழ் நவீனமயப்படுத்தும் செயற்திட்டமொன்று அரசினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொள்கை அபிவிருத்தி அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகத்தின் வழிநடாத்தலின் கீழ் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிறுவனத்தினால் (ICTA ) உள்நாட்டலுவல்கள் அமைச்சுடன் இணைந்து இச்செயற்றிட்டம் செயற்படுத்தப்படுகிறது. அரச சேவைகளை மக்களுக்கு சென்றடையச் செய்யும் மிகவும் முக்கியமான மற்றும் ஆரம்பப் படிநிலையாக பிரதேச மற்றும் மாவட்டச் செயலகங்களைக் குறிப்பிட முடியும். அதனால் மிகவும் வினைத்திறன் மிக்க அரச சேவையினை மக்களுக்கு வழங்குவதற்கு அந்த நிறுவனங்களின் இணையத்தளங்கள் மிகவும் முக்கியமான கருவியாக அமைகிறது.
எனினும் இவ்வாறான பெரும்;பாலான இணையச் சேவைகளில் இனங்காணப்பட்ட பல குறைபாடுகள் காணப்படுகின்றமையினால் இந்த இணையத்தளங்களை மேம்படுத்தும் செயற்றிட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ் காலி மாவட்ட இணையத்தளங்களை இற்றைப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதுடன், இதன் அடுத்த கட்டமாக கொழும்பு மாவட்ட இணையத்தளங்களை இற்றைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இணையச் சேவைகளில் காணப்படும் பாதுகாப்பு அபாயங்களை நீக்கியவாறு பயனர்களுக்கு மிகவும் நட்புறவான இணைய முகமொன்றை உருவாக்குதல் மற்றும் இணையத்தளங்களுக்கான தகவல்களை இற்றைப்படுத்துவதற்காக ஆளணியினரைப் பயிற்றுவித்தல் மற்றும் ஊக்குவித்தல் என்பன ICTA நிறுவனத்தினால் இச்செயற்றிட்டம் ஊடாக மேற்கொள்ளப்படுகிறது. இச்செயற்றிட்டம் ஊடாக 331 பிரதேச செயலகங்கள் மற்றும் 25 மாவட்டச் செயலகங்களின் இணையத்தளங்கள் நவீன தொழிநுட்பத்தின் கீழ் மேம்படுத்தப்படவுள்ளன.
ICTA நிறுவனத்தினால் இந்த இணையத்தளங்களை அபிவிருத்தி செய்யும் முதலாவது கட்டமாக 19 பிரதேச செயலகங்களினதும் காலி மாவட்டச் செயலகத்தினதும் இணையத்தளங்களை இற்றைப்படுத்தும் பணிகள் ஜூன் 30 ஆந் திகதியுடன் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்டச் செயலகம் மற்றும் 13 பிரதேச செயலகங்களின் இணையத்தளங்கள் தற்போது இற்றைப்படுத்தப்பட்டு வருவதுடன், ஜூலை 30 ஆந் திகதியுடன் அது பூர்த்தி செய்யப்படவுள்ளது.
இந்த செயற்றிட்டத்தின் கீழ் அனைத்து மாவட்டச் செயலகங்களிலும் மூன்று அரச அலுவலர்கள் இணையத்தளங்களைக் கையாளுபவர்களாக மேலதிகப் பயிற்சியளிக்கப்பட்டு அவர்கள் ஊடாக இணையத்தளங்களை இற்றைப்படுத்தல் மற்றும் பேணுகை மேற்கொள்ளப்படுகின்றன. அந்த அலுவலர்கள் மூலம் மாவட்டச் செயலகங்களிலுள்ள அலுவலர்கள் பயிற்றுவிக்கப்படுவர்.
உரியவாறு இணையத்தளங்களைப் பேணிச் செல்லுதல் மற்றும் இற்றைப்படுத்துவதற்குத் தேவையானவர்களை ஆட்சேர்ப்;புச் செய்யும் பணிகளும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த இணையத்தளங்கள் ஊடாக தற்போது செயற்படுத்தப்படும் ஈ – சேவைகள் உள்ளிட்ட பிரஜைகளுக்கு முக்கியத்துவம் மிக்க பல தகவல்களை அணுகுவதற்கான வசதியை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மேலதிகமாக தகவலறியும் சட்டம் ஊடாக வலுவூட்டப்பட்டுள்ள தகவல் வெளிப்படுத்தல் தொடர்பாக முக்கிய பணியை ஆற்றவும் இதனூடாக எதிர்பார்க்கப்படுகிறது.