ஈரானுடனான உறவில் மூன்றாவது நாட்டின் தலையீடு இல்லை என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட அமெரிக்கா, அந்நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நவம்பர் 4-ம் திகதியுடன் , அனைத்து நாடுகளும் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் இல்லையெனில் அந்நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியா ஈரானிலிருந்து அதிக அளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருவதுடன் ஈரானிலுள்ள சபஹார் துறைமுகத்தை மேம்படுத்தும் பணியினையும் இந்தியா மேற்கொண்டுள்ளது. இந்தநிலையில் அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி, ஈரானுடன் இந்தியா தொடர்ந்து பொருளாதார உறவுகளை தொடருமா என மக்களவையில் கேள்வியெழுப்பப்பட்டமைக்கு பதிலளித்த போதே வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே. சிங் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஈரானுடனான உறவுகள் என்பது இந்தியாவின் சொந்த நிலைப்பாடு எனவும் இ தில் 3-வது நாட்டின் தலையீடு இல்லை எனவும் தெரிவித்த அவர் இந்த விவகாரத்தில் இந்தியாவின் ; நலன்களைக் காக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதால் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்டவற்றை இந்தியா உன்னிப்பாக அவதானித’;து வருகின்றது எனவும் வெளியுறவுத் துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.