ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரத்தின் பெயரையும் இணைத்து சிபிஐ புதிய குற்றப்பத்திரிகையை இன்று பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் 3,500 கோடி ரூபாய் முதலீடு செய்தது.
இந்த முதலீட்டுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறவில்லை எனவும், இதற்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான நிறுவனம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த விவகாரத்தை அமலாக்கத் துறையும், சிபிஐயும் தீவிரமாக விசாரித்து வருகின்றன. டெல்லியில் உள்ள பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வருகிறது.
இந்நிலையில், ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் மற்றும் முன்னாள், இன்னாள் அரசு அதிகாரிகள் பெயரும் இணைக்கப்பட்டு சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது ஏற்கனவே சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.