யாழ். அச்சுவேலி பத்தமேனி வடபத்திரகாளியம்பாள் ஆலயத்திற்கெனப் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய சித்திரத் தேர் வெள்ளோட்ட விழா இன்று வியாழக்கிழமை(19) சிறப்பாக இடம்பெற்றது. இன்று முற்பகல் வடபத்திரகாளியம்பாளுக்கு விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து வெள்ளோட்ட விழாக் கிரியைகள் ஆரம்பமானது. கிரியைகளைத் தொடர்ந்து அடியவர்களின் அரோகராக் கோஷம் முழங்க ஆண் அடியவர்கள் ஒருபுறமும், பெண் அடியவர்கள் மறுபுறமும் வடம் தொட்டிழுக்கப் புதிய சித்திரத் தேர் ஆலய வீதியில் பவனி வந்த காட்சி அற்புதமானது.
சித்திரத்தேர் வெள்ளோட்டம் நிறைவுபெற்றதைத் தொடர்ந்து சித்திரத் தேரை நிர்மாணித்த ஆச்சாரியாரியார்கள் ஆலய நிர்வாக சபையினரால் விசேடமாகக் கெளரவிக்கப்பட்டனர்.
பல வருடங்கள் பழமை வாய்ந்த இவ்வாலயத்தில் கடந்த-2016 ஆம் ஆண்டு முதல் வருடாந்த மஹோற்சவம் சிறப்பாக இடம்பெற்று வருகிறது. இந்த நிலையில் பத்தமேனி கிராமத்தைச் சேர்ந்த உள்நாட்டு மற்றும் புலம்பெயர் அடியவர்களின் சுமார் 50 இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட நிதிப் பங்களிப்பில் இவ்வாலயத்துக்கான புதிய சித்திரத் தேர் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
அச்சுவேலி பத்தமேனியைச் சேர்ந்த சிற்பாசாரியார் சரவணமுத்து ஜெயராஜ் தலைமையிலான சிற்பாசாரியார்களால் கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் இவ்வாலயத்தின் புதிய சித்திரத் தேர் நிர்மாணத் திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதிய சித்திரத் தேர் பல்வேறு கலையம்சங்களும் பொருந்திய வகையில் அழகுறக் காட்சி தருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
படங்கள் – தீபன்