219
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடக்கில் கல்வியில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும், அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்களின் தாபன நிர்வாக அலுவலகக் குறைகளைக் களைந்து கல்வியின் வினைத்திறனை மேம்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் நடமாடும் சேவை இன்று வியாழக்கிழமை மாலை மன்னாரில் இடம் பெற்றது.
வடமாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை மாலை 2 மணியளவில் மன்னார் வலயக்கல்வி பணிமனையில் வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்தியன் தலைமையில் வடமாகாண கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் அவர்களின் நேரடி பங்குபற்றுதலுடன் குறித்த நடமாடும் சேவை இடம் பெற்றது.
வடக்கின் கல்வியில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும், அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்களின் தாபன நிர்வாக அலுவலகக் குறைகளைக் களைந்து கல்வியின் வினைத்திறனை மேம்படுத்தும் வகையில் மாபெரும் நடமாடும் சேவை ஒவ்வொரு வலயங்களிலும் நடைபெறவுள்ளது.
-இதன் முதற்கட்ட நிகழ்வு மன்னாரில் இடம் பெற்றது. -குறித்த நடமாடும் சேவையின் போது மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர், கல்வி அமைச்சு, மாகாணக் கல்வித் திணைக்கள உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதிபர் ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களின் நீண்டகாலமாக தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகளான சுயவிபரக் கோவைகள் பூர்த்தி,சம்பள உயர்வுகள், பதவி உயர்வுகள், விதவைகள் அநாதைகள் ஓய்வு ஊதிய இலக்கம், ஆசிரியர் பதிவு இலக்கம், கற்கை விடுமுறைகள், சம்பளமற்ற விடுமுறைகள்,வெளிநாட்டு விடுமுறைகள்,பிரசவ விடுமுறைகள், பிரமாணக் குறிப்பின் படி உள்ளீர்ப்பும் நியமனமும், பொருத்தமான நேரசூசியின்மை,ஏனைய நிர்வாகம், பாடசாலை சார்ந்த பிரச்சனைகள்,ஆசிரியர் விடுதிகள்,பாடசாலையின் அடிப்படைத் தேவைகள் தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வுகளை வழங்கும் வகையில் குறித்த நடமாடும் சேவை இடம் பெற்றது.
இதன் போது மன்னார் கல்வி வலயத்தைச் சேர்ந்த அதிபர்கள்,ஆசிரியர்கள்,கல்வி சாரா ஊழியர்கள் தமது பிரச்சினைகள் தொடர்பில் நேரில் வருகை தந்து பயனடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love