Home இலங்கை 48 ஆண்டுகளின் பின்னரும் நீக்கப்படாத பயங்கரவாதத் தடைச்சட்டம்!

48 ஆண்டுகளின் பின்னரும் நீக்கப்படாத பயங்கரவாதத் தடைச்சட்டம்!

by admin

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

இலங்கையில் இன்னமும் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஈழத் தமிழர்கள் கீழ்த்தரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் தமிழ் சிறுபான்மை மக்களையே பயங்கரவாதத் தடைச்சட்டம் பாதிப்பதாகவும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கடந்த ஆண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பில் ஆராய்ந்த ஐ.நாவின் விசேட நிபுணர் பென் எமர்சன் கூறியுள்ளார். இன்றுடன் பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு 48 ஆண்டுகள் ஆகின்றன. ஈழத் தமிழ் இனத்தின் சுதந்திர தாகத்தை ஒடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட அச் சட்டம் இன்னமும் தமிழ் மக்களை ஒடுக்கி ஆள்வதையே எமர்சனின் கருத்துக்கள் உணர்த்துகின்றன.

இலங்கை அரசின் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை ஊக்குவிப்புக்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் குறித்து ஆராய வந்திருந்த எமர்சன் இலங்கை விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பும்போது கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் மற்றொரு விடயத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தத்ததால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கும் செயற்பாட்டில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் அரசாங்கம் குறிப்பிட்ட காலத்திற்குள் நீதியை நிலைநாட்டத் தவறினால் இந்த விவகாரம் ஐ.நா பாதுகாப்புச் சபை வரை செல்லலாம் என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

பயங்கரவாதத் சட்டம் என்றால் என்ன? பயங்கரவாத விசாரணைப் பிரிவு, பொலிஸ் மற்றும் பாதுகாப்பு அமைச்சிற்கு கைது செய்தல், விசாரணை செய்தல், ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளல் என்பவை தொடர்பில் பரந்தளவிலான அதிகாரத்தை பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசரகால சட்ட விதிமுறை வழங்குகிறது. சந்தேகத்தின் அடிப்படையிலேனும் கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பிக்க முடியும். விசாரணைக்காக நபர் ஒருவரை வெவ்வேறு இடங்களுக்குக் கொண்டுச் செல்கின்ற நிலையில் நீதிமன்ற வழிநடத்தல் இன்றி சொத்துக்களை முடக்க முடியும். சந்தேக நபரை தடுத்து வைப்பதன் கால எல்லையை 18 மாதங்களாக நீடிக்க முடியும். எனினும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படும் ஒருவர் வழக்கு விசாரணை முடியும் வரை கால வரையரையின்றி தடுத்து வைக்கும் நிலையே நடைமுறையில் உள்ளது.

கைதாகி சிறையில் உள்ளபோது பாரிய – கீழ்த்தரமான சித்திரவதைகள் இடம்பெறுகின்றன. நீதிமன்றங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்ற சம்பவங்கள் மிகவும் அரிதாகவே இடம்பெறுகின்றன. நீதிமன்றங்களினாலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்த அதிகாரமற்றும் அந்த நடவடிக்கைக்கு இணக்கம் செய்யும் நிலையுமே நடைமுறையில் உள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பொறுத்தவரையில் நீதிமன்றத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படும் ஒரு நிறுவனமாகவே கருகிறது. சிறுபான்மை தமிழ் இன மக்களுக்கான நீதி மறுத்து அவர்கள்மீதான மனித உரிமை மீறலை நியாயப்படுத்தியும் எதையும் செய்யும் அதிகாரத்தை இச் சட்டம் வழங்குகிறது.

தமிழ் மக்கள்மீது இன அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவே பயங்கரவாதத் தடைச்சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. அதற்கு முந்தைய காலங்களில் அரசின் மூலம் உத்தியோக பூர்வமற்ற முறையில் இனக் கலவரங்கள் ஏற்படுத்தப்பட்டன. பயங்கரவாதத் தடைச்சட்டம் இந்த தீவின் சிறுபான்மைத் தமிழ் இன மக்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி அழிக்கும் உத்தியோகபூர்வ முறையை அதிகாரத்தை அரச எந்திரம் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கும் இனவாதிகளுக்கும் கையளித்தது. ஒடுக்குமுறைக்கு உள்ளான ஈழத் தமிழ் மக்கள் தனி நாடு ஒன்றிலேயே சுதந்திரமாக வாழ இயலும் என்றும் அது தமிழீழம் என்ற நாட்டிலேயே சாத்தியமாகும் என்றும் முடிவுக்கு வர அடிப்படையாக இருந்த காரணங்களில் பயங்கரவாதத் தடைச்சட்டமும் ஒன்றாகும்.

பயங்கரவாத தடைச் சட்டம் காரணமாக ஈழத் தமிழ் மக்கள் கடந்த 48 வருடங்களாக பெரும் இன ஒடுக்குமுறைகளை சந்தித்து வருகின்றனர். தென்னிலங்கையைப் பொறுத்தவரையில் எவரும் எந்த நேரத்திலும் எந்தக் காரணத்தைக் கூறியேனும் கைது செய்யப்படலாம் என்றும் அவருக்கு என்ன நேர்ந்தாலும் அதனைக் குறித்து கேட்க இடமில்லை என்ற நிலையும் காணப்பட்டது. இது தமிழ் மக்களின் அரசு அல்ல என்பதையும் இது தமிழ் மக்களை ஒடுக்கி அழிக்கும் அரசு என்பதையும் தமிழ் மக்கள் தமக்கான பாதுகாப்பை தமிழ் அரசு ஒன்றின் ஊடாகவே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற யதார்த்தத்தையும் இச்சட்டத்தின் நடைமுறைகள் ஈழத் தமிழ் இனத்திற்கு உணர்த்தி நின்றன.

சர்வதேசத்தின் பொறுமைக்கும் எல்லையுண்டு என்றும் எமர்சன் எச்சரித்திருக்கிறார். எனினும் பயங்கரவாத ஒடுக்குதல் குறித்த ஐ.நாவின் துறை சார்ந்த நிபுணர் ஈழத் தமிழர்கள் சந்தித்த ஒடுக்குமுறைகள் மாத்திரமின்றி உலகெங்கிலும் நடந்த ஒடுக்குமுறைகளுக்கும் பொறுப்புக் கூற வேண்டியவர்களாகவும் எமர்சனும் ஐ.நாவும் இருப்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். எமர்சனின் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசு வழமைபோல நிராகரித்துள்ளது. 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கப்போவதாகவும் அது ஒரு கொடிய சட்டம் என்றும் அமைச்சர் மங்கள சமரவீர ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் அனல் பறக்கப் பேசியிருந்தார்.

இதேவேளை இவ் வருடம் மார்ச் மாதம் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவை இடம்பெற்ற சமயத்தில் ஜெனீவாவில் வைத்து பேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் பொதுச் செயலாளர் மனோ தித்தவல்ல பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுலில் இல்லை என்று கூறியிருந்தார். ஆனால் பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் ஒன்று உருவாக்கப்பட இருப்பதாக மங்கள சமரவீர கூறியிருந்தார். மிகக் கொடிய இந்த சட்டத்தின் பெயர் மாற்றப்படுகிறதே தவிர, இதன் உள்ளடக்கம் மாற்றப்படவில்லை என்று மனித உரிமையாளர்கள் சுட்டிக்காட்டினர். சர்வதேச சமூகத்திற்காக சட்டத்தின் பெயரை மாற்றுவதுடன் சிங்கள இனவாதிகளை சமாளிக்க சட்டத்தின் உள்ளடக்கத்தை பாதுகாக்கவும் இலங்கை அரசு தீர்மானித்திருக்கிறது.

எமர்சன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுவதற்கு சில நாட்களின் முன்னர், அதாவது ஜூன் மாத இறுதியில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்குவது தொடர்பாக தீர்மானிக்கவில்லை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ கூறியிருந்தார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தளர்த்துமாறு கோரிய சில பலம்பொருந்திய நாடுகளும் தற்போது பயங்கரவாத தடைச் சட்டத்தினை பலப்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும் என 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தபோதிலும், இதுவரை அதற்கான உரிய நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் கூறியதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.

பயங்கரவாத சட்டம் உருவாக்கப்பட்டு 48 ஆண்டுகள் என்றால் பயங்கரவாத சட்டத்தை நீக்கு! என்று தமிழ் மக்கள் குரல் எழுப்பியும் 48 ஆண்டுகள் என்று அர்த்தம். இச் சட்டத்தால் பல ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் பிள்ளைகளை, தாய், தந்தையரை இழந்துபோயுள்ளனர். கைதகளின் உறவுகள் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். சிறையில் காலவரையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். எல்லாப் போராட்டங்களும் தீர்வின்றி முடக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதத் சட்டமும் அதனை கொண்டு கைதுசெய்யப்பட்டவர்களும் கொஞ்சமும் மனித நேயமற்ற முறையில் தென்னிலங்கையின் அரசியல் முதலீடுகளாக ஆகியிருப்பதே இத் தீவின் பெரும் துயரமாகும்.

சர்வதேச மனித உரிமை விதிமுறைகளுக்கு அமைவாகவே புதிய பயங்கரவாத தடைச் சட்டம் உருவக்கப்படும் எனவும் அனைத்து மக்களும் பயமின்றி வாழ்வதற்கான உரிமை உறுதிப்படுத்தப்படும் எனவும் முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க டெல்லியில் வைத்து கூறியிருந்தார். இலங்கை அரசாங்கம் பயங்கரவாத சட்டத்தை நீக்கும் எண்ணத்தை கொண்டிருப்பதாக தெரியவில்லை. தமிழ் மக்களை தொடர்ந்தும் ஒடுக்கி ஆளும் ஒரு அரசு, அந்த ஒடுக்குமுறைக்கு எதிராக அவர்கள் கிளர்ந்தெழாமல் தடுத்து ஒடுக்க இந்தச் சட்டம் தேவை என்று கருதுவதன் காரணமாகவே இந்தச் சட்டத்தை எப்படியோ நடைமுறையில் வைத்திருக்க வேண்டும் என்று கருதுகிறது.

ஈழத் தமிழர்களின் தனிநாட்டு உரிமைப் போராட்டத்தை ஒடுக்கும் சட்டத்தையே இலங்கை அரசு பயங்கரவாதத் தடைச்சட்டம் என்று அழைக்கிறது. தமிழ் மக்களின் சுய உரிமையை அவர்களிடமே கையளித்தல், அவர்களின் தாயகப் பிரதேசத்தில் அவர்களே ஆட்சி புரிதல், அவர்களின் தாயகத்தை அபகரிக்காது விடுதல், அவர்கள் மீதான இன ஒடுக்குமுறை மற்றும் இன அழிப்புச் செயல்களை நிறுத்திக் கொள்ளல் என்பனவற்றை மேற்கொள்ளாமல் எந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்தினாலும் தமிழர்களின் இன உரிமைப் போராட்டத்தின் பயணத்தை தடுக்க இயலாது. இதனை 2009 இனப்படுகொலையின் பின்னர் பல்வேறு தடவைகள் ஈழத் தமிழ் மக்கள் உணர்த்தி விட்டனர்.

ஆசியாவின் மண்டேலா என்றும் ஆசியாவின் காந்தி என்றும் அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கே வழங்க வேண்டும் என்றும் எமது தலைவர்களாளேயே வருணிக்கப்பட்ட இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்திற்கு உதவுதல் என்பது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவுவதற்கு ஒப்பானது என்று கூறியதும் அரசியல் கைதியான ஆனந்தசுதாகரனின் விடுதலை தொடர்பில் காண்பிக்கும் மௌனமும் , பயங்கரவாதத் தடைச்சட்ட நீக்கம் தொடர்பிலும் பொறுப்புக் கூறுதல் மற்றும் நீதியை நிலை நாட்டுதல் தொடர்பிலும் ஈழத் தமிழர்களின் எதிர்காலம் தொடர்பிலும் பல சேதிகளை சொல்லிச் செல்கிறது.

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்..

Spread the love
 
 
      

Related News

1 comment

Logeswaran July 20, 2018 - 1:34 pm

ஒடுக்குமுறை இன்றி மற்றும் இன அழிப்பு அற்று தமிழர்கள் தமது மனித உரிமைகள் முழுவதையும் அனுபவிக்க வேண்டும் என்றால் அவர்கள் தங்களை பலப்படுத்த வேண்டும். உலகளாவிய செல்வாக்கை அடைய வேண்டும். இவைகள் அங்கும் இங்குமாக நடக்கிறன. இதை மாற்றி ஒழுங்கு படுத்தி நடக்க வைக்க வேண்டும். இதற்கான விழிப்புணர்வையும் தூண்டுதலையும் பெரிய அளவில் செய்ய வேண்டும். இதை சில தமிழர்கள் செய்யத் தொடங்கி விட்டார்கள்.

ஒவ்வாரு துறையிலும் தமிழ் சமூகத்தை அதி உயர் நிலைக்கு நகர்த்த வேண்டும். உதாரணமாக இராஜதந்திரிகளை, ஆட்சிவல்லுனர்களாகிய ஜனாதிபதிகள், பிரதம மந்திரிகள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புத்திஜீவிகளை, பெரும் செல்வர்களை, பல்லின வாழ்க்கை முறைக்குள் வாழக் கூடியவர்களை உலகளவில் அடையாளம் காணுகின்றார்கள் மற்றும் உருவாக்குகின்றார்கள்.

ஐநா, ஐரோப்பிய ஒன்றியம், காமன்வெல்த் நாடுகள், மனித உரிமை அமைப்புக்கள், அரச சார்பற்ற அமைப்புக்கள் மற்றும் ஒவ்வொரு நாட்டிலும் செல்வாக்கு மிகுந்த வேலைகளைப் பெற்று உலகச் செல்வாக்கை அடைய தமிழர்களை ஊக்குவிகின்றார்கள்.

செல்வாக்கு மிக்க வேலைகளைப் பயன்படுத்தி உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கும் ஏனைய சமூகங்களுக்கும் முடிந்தவரை ஆதரவு வழங்குகின்றார்கள். இது காலப் போக்கில் இலங்கையில் தமிழர்கள் சுய ஆட்சியுடன் சுதந்திரமாக வாழ பெரிய அளவில் உதவும்.

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More