குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் முகநூல் பதிவு ஒன்றுக்கு எதிராக கிளிநொச்சி காவல் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டு விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிளிநொச்சி பொதுச் சந்தையின் நிரந்தர கட்டடத்திற்கான அடிக்கல்லை பிரதமர் ரணில் விக்கிரம சிங்க நாளை(21) திகதி நாட்டுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த திங்கள் கிழமை கரைச்சி பிரதேச சபையினரால் புதிய கட்டத்திற்கு வியாபாரிகளை கொண்டு அடிக் கல் நாட்டப்பட்டது என வியாபாரிகள் தெரிவித்திருந்தனர்.
இதனை கிளிநொச்சி இளைஞன் ஒருவன் தனது முகநூலில் பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ள திட்டத்திற்கு பிரதேச சபை தவிசாளர் அடிக்கல் நாட்டிவைத்து நாட்டின் பிரதமரை இழிவுப்படுத்தியுள்ளார் என பதிவு ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
இது தன்னை அவதூறு செய்த பதிவு என தெரிவித்தே கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் முறைப்பாடு செய்திருந்தார். இதனை தொடர்ந்து விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர் இந்த முறைப்பாட்டு வழக்கினை நீதி மன்ற விசாரணைக்கு அனுப்பியுள்ளனா்.
இது தொடர்பில் காவல் நிலையத்தில் வைத்து தவிசாளர் அ.வேழலமாலிகிதனிடம் கருத்து கேட்ட போது அவர் கருத்து கூற மறுத்துவிட்டார்.