நாட்டின் ஏனைய பிரதேசங்களோடு ஒப்பிடுகையில் அபிவிருத்திகள் மிகவும் குறைவு என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நிதி அமைச்சின் 185 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட கிளிநொச்சி தானியக் களுஞ்சியசாலையை இன்றையதினம் (21.07.18) திறந்து வைத்து உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ,
“வடக்கு மாகாணத்தில் நாம் இன்று ஒரு சிறந்த ஒரு வேலைத்திட்டத்தை ஆரம்பித்திருகின்றோம். வடக்கு யுத்தத்தால் அழிவடைந்து விட்டது. மக்கள் மரணித்தார்கள்,குடும்பங்கள் சீர்குலைந்தன, பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தன. இப்போது யுத்தம் நிறைவு பெற்றிருக்கிறது, சமாதானம் இருக்கிறது. அப்படி இருந்தாலும் இங்கே இன்னும் பல பிரச்சினைகள் இருக்கின்றன. இதில் ஒன்றுதான் பொருளாதாரம், சமாதானம் ஏற்பட்டிருந்தாலம் அபிவிருத்தி குறைவாகவே உள்ளது.
நாட்டின் ஏனைய இடங்களை விட வடக்கில் அபிவிருத்திகள் மிகவும் குறைவு. கடந்த முறை இங்கு வருகைதந்ததன் நோக்கம் இந்தப் பிரச்சினைகளுக்கு ஒரு அவதானத்தை செலுத்துவதற்காக அத்தோடு பெண்களின் பிரச்சினைகள் கைதிகளின் பிரச்சினைகள் என்பனவும் உண்டு அதைப் பற்றி பின்னர் பேசுகிறேன்.
இங்கே விவசாயிகளிடம் நிறைய பிரச்சினைகள் உண்டு, அவர்கள் அதிக கடன்களை பெற்றிருக்கின்றார்கள், எனவே இந்த களஞ்சியசாலை மூலம் விவசாயிகளிடத்தில் ஒரு மாற்றம் ஏற்படவிருக்கிறது. நல்ல நிலை கிடைக்கும் வரைக்கும் களஞ்சியப்படுத்தி வைத்திருக்க முடியும், களஞ்சியப்படுத்தி வைத்திருக்கும் காலத்தில் இதனை வைத்து கடன்களை பெற்றுக்கொள்ள முடியும்
கம்பெரலிய வேலைத்திட்டத்தின் மூலம் இந்த பிரதேசங்களில் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படவுள்ளன இதன் மூலம் இந்தப் பிரதேசங்களின் ஓப்பந்தகாரர்களுக்கும் வேலைகள் கிடைக்கவுள்ளன. கொழும்பில் இருக்கின்ற பெரிய முதலாளிகளுக்கு அல்ல. எனவே இப்படியான வேலைத்திட்டத்தின் மூலம் பிரதேச மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் பணிகளை முன்னெடுக்கவுள்ளோம். மேலும் இந்த செயற்றிட்டத்தின் மூலம் இந்த பிரதேசங்களில் உள்ள குளங்களையும் புனரமைக்கவுள்ளோம் இதன் மூலம் விவசாய நடவடிக்கைகள் மேம்பட்டு விவசாயிகள் நன்மையடைவார்கள்.
என்ரபிரைஸ் சிறிலங்கா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு அதிக நிதிகள் கிடைக்கப்பெற்று அவர்கள் மேலும் நன்மையடைவார்கள். ஒரு இலட்சமாக இருந்தாலும் சரி ஜந்து இலட்சமாக இருந்தாலும் சரி விவசாயிகளுக்கு குறைந்த வட்டி வீதத்தில் அல்லது வட்டி இல்லாமல் கடன்களை பெற்றுக்கொடுக்க முடியும். விவசாயிகளுக்கு கடன்களை வழங்கிய பின் அவர்களிடம் இருந்து அந்த கடனை மீள பெறுவது கடிமானது எனவே அதற்கான ஒரு சிறந்த வழியை நாங்கள் அறிமுகப்படுத்தவுள்ளோம் இப்படியான நீண்ட கால வேலைத்திட்டம் இருக்கிறது.
மேலும் சிறந்த போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் வகையில் பூநகரி மன்னார் வவுனியா ஊடான பெருந்தெரு மற்றும் திருகோணமலைக்கான பாதை உட்டபட பல பாதைகளை அமைக்கவுள்ளோம் அதேபோன்று இந்திய அரசின் உதவியுடன் பலாலி விமானநிலையம் காங்கேசன் துறை உட்பட துறைகள் என்பவற்றையும் அபிவிருத்திசெய்யவுள்ளோம் இதன் மூலம் நீண்டகால திட்டங்களை மேற்கொள்ளவுள்ளோம் இவை அனைத்தும் கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கே.
இலங்கை மக்கள் என்ற வகையில் சந்தோசம் துக்கம் இரண்டையும் பகிர்ந்துகொள்ள வேண்டும் உங்களின் துக்கத்ததை நாமும் பகிர்ந்துகொள்கின்றோம். அனைவருக்கும் சிறந்த வாழ்க்கை கிடைக்கட்டும்