குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
நாட்டில் ஆட்சி உரிமை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மாத்திரமே இருப்பதாக அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். பதுளையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அதிகமான காலம் நாட்டை ஆட்சி செய்யும் சந்தர்ப்பம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கே கிடைத்தது. தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது அமைச்சரவையின் முக்கிய பதவிகளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்களே வகித்தனர். இதன் பலனாக மக்களுக்கு சேவை செய்த முடிந்தது எனவும் சரத் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 1994 ஆம் ஆண்டில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஜனாதிபதிகளே நாட்டில் ஆட்சி செய்து வருகின்றனர். மைத்திரிபால சிறிசேன பொதுவேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றாலும் பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் பதவியை பெற்றுக்கொண்டார். இதனால், கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இலங்கையில் சுதந்திரக்கட்சியின் தலைமையிலான ஆட்சியே நடந்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கத்தில் பிரதான கட்சியாக ஐக்கிய தேசியக்கட்சி விளங்கிய போதிலும் அரசாங்கத்தின் பிரதானியான நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதியிடமே இருக்கின்றது என கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.