“தன்மானத்தை விற்பதை விட இறப்பதே மேல்’’ இஸ்லா மாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஷாருத் சித்திக்….
நவாஸ் செரீப்பும் மற்றும் அவரது மகள் மரியமும் சிறையில் இருந்து வெளியே வரக் கூடாது என தலைமை நீதிபதியை, ஐ.எஸ்.ஐ வலியுறுத்தி உள்ளது என இஸ்லா மாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஷாருத் சித்திக் குற்றம்சாட்டியுள்ளார். பனாமா ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்புக்கு 10 ஆண்டும், அவரது மகள் மரியத்துக்கு 7 ஆண்டும், மருமகன் முகமது சப்தாருக்கு ஒரு ஆண்டும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட இவர்கள் இஸ்லாமா பாத்தில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளனர். இந்தநிலையில் ராவல்பிண்டி சட்டத்தரணிகள் சங்கக் கூட்டத்தில் இஸ்லா மாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஷாருத் சித்திக் கலந்து கொண்டு உரையாற்றினார். அதன்போது பாகிஸ்தானின் உளவுத்துறையான ‘ஐ.எஸ்.ஐ’ மீது பகிரங்கமாக புகார் கூறினார். பாகிஸ்தான் நீதிதுறை மற்றும் செய்தி மற்றும் ஊடகங்களை ஐ.எஸ்.ஐ. உளவுத்துறை தன்வசப்படுத்த நினைக்கிறது. குறிப்பாக நீதித்துறை சுதந்திரமாக செயல்படக் கூடாது என கருதுகிறது. ஊடகங்கள் உண்மையை எடுத்துக் கூற தடை விதிக்கிறது.
பல வழக்குகளில் நேர்மையான தீர்ப்பு வழங்க கூடாது. தாங்கள் விரும்பிய படிதான் தீர்ப்பளிக்க வேண்டும் என அச்சுறுத்துகிறது. தேர்தல் நடைபெறும் 25-ந்தேதிக்கு முன்பு நவாஸ் செரீப்பும், அவரது மகள் மரியமும் சிறையில் இருந்து வெளியே வரக் கூடாது என தலைமை நீதிபதியை வலியுறுத்தி உள்ளது. அதேபோன்று மேல் முறையீடு (அப்பீல்) மனு மீது நவாஸ் செரீப்புக்கு சாதகமாக தீர்ப்பளிக்க கூடாது என்றும், அச்சுறுத்துகின்றனர். ஆனால் அதற்கு நான் உடன்பட மாட்டேன் என கூறி மறுத்துவிட்டேன். தன்மானத்தை விற்பதை விட இறப்பதே மேல்’’ என ஆவேசமாக கூறினார்.