யாழ் யோகா உலகம் அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச யோகா தின விழா நேற்றுச் சனிக்கிழமை (21-07-2018) பிற்பகல் யாழ். நல்லூரில் சர்வதேச தரத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவரும், சிவபூமி அறக்கட்டளையின் தலைவருமான செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடாதிபதி கலாநிதி க.சுதாகர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்தமருத்துவ அலகுத் தலைவர் வைத்தியகலாநிதி திருமதி- விவியன் சத்தியசீலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்தனர்.
விருந்தினர்களும்,யோகக் கலை ஆர்வலர்களும், பொதுமக்களும் நேற்றுப் பிற்பகல்-03.30 மணியளவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வாயிலிருந்து விழா மண்டபமான நல்லூர் ஸ்ரீதுர்க்கா மணிமண்டபத்தை நோக்கித் தமிழர்களின் பாரம்பரியக் கலைவடிவமான கரகாட்டத்துடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல், இறைவணக்கத்துடன் விழா நிகழ்வுகள் நல்லூர் ஸ்ரீ துர்க்கா மணிமண்டபத்தில் ஆரம்பமானது.
யாழ்.யோகா உலகம் அமைப்பின் இயக்குநர் செந்தமிழறிஞன் சி.உமாசுதன் தலைமையில் இடம்பெற்ற விழாவில் யாழ். பல்கலைக்கழக நடனத்துறை மாணவிகளின் வரவேற்பு நடனம், தலைமையுரை, விருந்தினர்களின் சிறப்புரைகள் என்பன நடைபெற்றன.
குறித்த விழாவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறை மாணவர்களும் மற்றும் யாழ் யோகா உலகம் மாணவர்களும் இணைந்து வழங்கிய சித்த யோக அசைவுகள் சிறப்பாக அமைந்தது
இந்த நிகழ்வில் யாழ்யோகா உலகம் அமைப்பின் யோகா ஆச்சாரியார்களும் யோகா மாணவர்களும் இணைந்து வழங்கிய யோகா விசேட ஆற்றுகை இடம்பெற்றது. யாழ் யோகா உலகத்தின் இயக்குநரும், யோகாப் போதனாசிரியருமான சி.உமாசுதன் மற்றும் யோகாப் போதனாசிரியரியர்களான யோ. பிரசாத் மொஷமட் சதாம் மற்றும் யோகா மாணவர்களான சதீஸ் ஜனார்த்தன ன் ரமணன் நளின் அட்சயா கிருசாளினி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு ஆற்றுகை செய்த யோகா விசேட ஆற்றுகை காட்சிகளை மக்கள் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வைக் கண்டு சபையில் பலத்த கைதட்டல் எழுந்ததுடன் அங்கு கூடியிருந்த விருந்தினர்கள் உள்ளிட்ட பலரதும் பாராட்டுதலையும் பெற்றது. சுமார்-20 நிமிடங்கள் வரை அரங்கேறிய இந்த நிகழ்வில் யோகாசானக் கலையிலுள்ள கடினமான பல்வேறு ஆசனங்களையும் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் இணைந்து எளிமையாக அரங்கேற்றிச் சபையில் நிறைந்திருந்த யோகா ஆர்வலர்களை வியப்பூட்டினர்.
இதேவேளை, இந்த விழாவில் அரங்கேறிய நீர்வேலி றோமன் கத்தோலிக்க மாணவிகளின் சமநிலைக் கரகம் நிகழ்வு தமிழர்களின் பாரம்பரியத்தைப் பறைசாற்றுவதாக அமைந்திருந்தது. சிறப்பு நிகழ்வாக யோகாக் கலைஞர்கள் மற்றும் யோகாத் துறையின் வளர்ச்சிக்கு உதவி வரும் பலரும் விழாவில் விசேடமாகக் கெளரவிக்கப்பட்டனர். விழா நிகழ்வுகள் முழுவதையும் வர்ணனைக் கலாநிதி மதுரகவி காரை. எம்.பி அருளானந்தன் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்.
யாழ். யோகா உலகம் அமைப்பு நான்காவது தடவையாக நல்லூரில் ஏற்பாடு செய்து நடாத்திய சர்வதேச யோகா தின விழா ஈழத்தமிழர்கள் யோகாக் கலை மீது கொண்டுள்ள ஆர்வத்தை உலக அளவில் எடுத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை.யாழ். யோகா உலகம் அமைப்புத் தொடர்ந்தும் இவ்வாறான விழாக்களை ஏற்பாடு செய்து நடாத்துவதுடன் தனது சேவைகளைக் கிராம மட்டத்துக்கும் விரிவுபடுத்த வேண்டுமென்பதே பலரதும் எதிர்பார்ப்பாகும்.