தென்-மேற்கு சிரியாவின் போர் நிகழும் பகுதியிலிருந்து சிரியாவின் வைட் ஹெல்மெட்ஸ் எனப்படும் பொதுமக்கள் பாதுகாப்பு குழுவை சேர்ந்தவர்களை மீட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. வைட் ஹெல்மெட்ஸ் குழுவை சேர்ந்த பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டிலுள்ள கோலன் ஹைட்ஸ் வழியாக ஜோர்டானுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.
800 பணியாளர்களையும் அவர்களது குடும்பங்களையும் மீட்பதற்கு உதவுமாறு இஸ்ரேலிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தநிலையில் இவ்வறு 422 பேர் மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்டவர்களில் 100 பேர் வைட் ஹெல்மெட்ஸ் பணியாளர்கள் எனவும் ஏனையவர்கள் அவர்களது குடும்பத்தினர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட 422 பேரும் ஜோர்டானின் தடைசெய்யப்பட்ட பகுதியில் தங்கவைக்கப்பட்டு, ஐநாவின் மதிப்பீடு முடிந்தவுடன் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவின் போர் மூண்டுள்ள பகுதியிலிருந்து பொதுமக்களை காப்பாற்றும் தன்னார்வ பணியாளர்கள் என வைட் ஹெல்மெட்ஸ் குழுவினர் தங்களை தாங்களே அழைத்துக்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது