குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
செம்மணியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதில் காவற்துறையினர் அசமந்தமாக செயற்படுவதாக குற்றசாட்டுக்கள் எழுந்துள்ளன.
செம்மணி பகுதியில் நீர் தாங்கி அமைப்பதற்காக மண்ணினை அகழ்ந்த போது , கடந்த வெள்ளிக்கிழமை மாலை மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டன. அது தொடர்பில் காவற்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதனை அடுத்து கடந்த சனிக்கிழமை மாலை யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் சி.சதிஸ்தரன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன், அகழ்ந்து எடுத்து சென்ற மண்ணினையும் பரிசோதனைக்கு உட்படுத்துமாறும், அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் உத்தரவிட்டு இருந்தார்.
இந்நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுகிழமை யாழ்.போதனா வைத்திய சாலை சட்டவைத்திய அதிகாரி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று இருந்தார். அதன் போது யாழ். காவற்துறை நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சம்பவ இடத்திற்கு செல்லவில்லை. சட்டவைத்திய அதிகாரி க.மயூரதன் நேற்றுகாலை 11 மணியளவில் சம்பவ இடத்திற்கு சென்ற போது , தடயவியல் காவற்துறையினர் மற்றும் குற்றத்தடுப்பு காவற்துறையினர் மாத்திரமே அங்கு நின்றனர். பொறுப்பதிகாரிகள் எவரும் சம்பவ இடத்திற்கு செல்லவில்லை .
அதேவேளை அங்கு அகழ்வு பணிகளை மேற்கொள்வதற்கு உரிய உபகரணங்கள் , ஏற்பாடுகள் எவையும் காணப்படவில்லை. அதனால் அகழ்வு பணிகளை முன்னெடுக்க வந்திருந்த சட்ட வைத்திய அதிகாரியின் தலைமையிலான குழுவினர் அகழ்வு பணிகளை ஒத்தி வைத்து சென்றனர். நீதிமன்றின் ஊடாக குறித்த அகழ்வு பணிகள் நேர்த்தியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என பலவேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.