குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
கிளிநொச்சி நீதவான் நீதி மன்றினால் விளக்க மறியலில் வைக்கப்பட்ட முள்ளம்தண்டு வடம் ( இடுப்புக்கு கீழ் இயங்காத) பாதிக்கப்பட்ட முன்னாள் போராளியான ஒருவர் யாழ்சிறைச்சாலையில் மிக மோசமாக நடத்தப்பட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
அடிதடி பிரச்சினை ஒன்றுக்காக தர்மபுரம் காவற்துறையினரால் கைது செய்யப்பட்ட குமாரசாமி பிரபாகரன் என்பவரே தான் யாழ் சிறைச்சாலையில் மாற்றுத்திறனாளிக்குரிய எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி மிகவும் சிரப்பட்டதாகவும் தன்னை இடுப்புக்கு கீழ் இயங்காத ஒரு மனிதன் என்ற மனிதாபிமானம் இன்றி நடத்தியதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
கடந்த 18 ஆம் திகதி காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு 19 ஆம் திகதி நீதி மன்றுக்கு கொண்டு செல்லப்பட்டு விளக்க மறியலில் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையலில் அன்றிரவு ஏழு மணிக்கு யாழ் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், இதற்கு முன்னர் தர்மபுரம் காவற்துறை நிலையத்தில் ஒரு நாள் முழுவதும் சக்கர நாற்காலியிலேயே இருந்ததாகவும் தன்னால் மலம் சலம் கழிக்க கூட முடியாத அளவில் அவஸ்த்தைப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சிறைச்சாலைக்கு கொண்டு சென்ற பின்னர் அங்கு உள்ளே செல்லும் பாதையில் தன்னுடைய சக்கர நாற்காலியை கொண்டு செல்ல முடியாத நிலையில் தன்னை சிலர் தூக்கிச்சென்று சிறைச்சாலைக்குள் கிடத்தியதாகவும் தெரிவித்த அவர் அங்கு ஒரு மாற்றுத்திறனாளிக்குரிய எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை எனவும், இடுப்புக்கு கீழ் இயங்காத தன்னால் மலம் சலம் கழிக்க முடியாது மிகவும் துன்பப்ட்டதாகவும் நீண்ட நேரமாக ஒரே இடத்தில் இருந்தமையினால் தன்னுடைய இயங்காத காலில் காணப்பட்ட காயங்களில் எறும்புகள் தொற்றிக் கொண்டதாகவும் மாற்று திறனாளியான பிரபாகரன் குறிப்பிட்டார்.
இதனையடுத்து 20 ஆம் திகதி சிறைச்சாலை வைத்தியரிடம் கெஞ்சி மன்றாடி தன்னுடைய நிலைமையினை கூறி யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு சிகிசைக்காக சென்றதாகவும் அங்கு தான் இடுப்புக்கு கீழ் இயங்காத ஒரு மாற்றுத்திறனாளி என்பதனை கூட கவனத்தில் எடுக்காது தனது கையினை சங்கிலியால் கட்டி கட்டிலுடன் கட்டியிருந்ததாகவும் தெரிவித்தார். மேலும் 18 ஆம் திகதி கைது செய்யப்பட்பட்ட தான் 20 ஆம் திகதி இரவே யாழ் வைத்தியசாலையில் மலம் கழித்து குளித்ததாகவும் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் மாற்றுது்திறனாளிக்குரிய எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை என்றும், விளக்க மறியலுக்கு சென்ற தங்களை பாரிய குற்றங்களில் ஈடுப்பட்டவர்கள் போன்று சிறைச்சாலை அதிகாரிகள் நடத்துகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.