குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
மத்திய அரசாங்கம் முன்னெடுக்கின்ற திட்டங்களின் பெயர்கள் உட்பட அனைத்தும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழியிலேயே பாவிக்க வேண்டுமென யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களான முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மற்றும் விஐயகலா மகேஸ்வரன் ஆகியோரின் தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது.
இதன் போது மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்ற திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்ட போது அதில் ஒரு திட்டத்தின் பெயர் சிங்கள சொல்லிலேயே காணப்பட்டிருந்தது. அதற்கு தமிழ்ப் பெயர் என்ன என்றும் அதனையே பாவிக்க வேண்டுமென மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா கோரியிருந்தார்.
அவ்வாறான பெயர் கொண்டே தமக்கு சுற்று நிருபங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கமையவே இத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரச அதிகாரிகளினால் விளக்கமளிக்கப்பட்டது. இதனால் சபையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இதன் போது கருத்து வெளியிட்ட முதலமைச்சர் அவ்வாறு தெற்கில் இருக்கின்றவர்கள் சிங்களப் பெயர் அல்லது சிங்களச் சொல் கொண்டே திட்டங்களை அறிமுகப்படுத்துகின்றனர். ஆயினும் அவர்களில் சிலர் எங்களுடைய பிரதேசங்களில் நாங்கள் தமிழ்ப் பெயரைப் பாவிப்பதற்கும் சம்மதிக்கின்றனர்
ஆனாலும் கொள்கை ரீதியாக நாடு முழுவதும் ஒரே சொல் கொண்டு பாவிக்க வேண்டுமென்றே தெற்கிலிருக்கின்றவர்கள் கூறுகின்றனர்.
அதற்கமையவே நாங்கள் மாகாண சபையால் அம்மாச்சி உணவகம் என்று பெயரை வைப்பதற்கே அவர்கள் தடைகளை ஏற்படுத்தியிருந்தனர். ஆகவே எங்களது பிரதேசங்களில் நாம் முன்னெடுக்கின்ற செயற்பாடுகளுக்கு எங்களது மொழியில் பெயர்களை வைக்க வேண்டும் என்றார்.
இதன் பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மாகாண சபையோ மத்திய அரசாங்கமோ முன்னெடுக்கின்ற திட்டங்கள் அல்லது செயற்பாடுகளுக்கு தமிழ் மொழியிலையே பெயர்களை வைத்து அதற்கமையவே செயற்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது.