குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
யாழ் மாவட்டத்தில் நாய்க்கடிக்கு இலக்காகி தினமும் சராசரியாக முப்பதிற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
நேற்றைய யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சுகாதார விடயங்கள் எடுத்துக் கொள்ளப்பட்ட போது யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக பாராட்டிய மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்த வேண்டுமென்றும் தெரிவித்தார். அத்தோடு ஏனைய வைத்திய சாலைகளயின் தேவைகள் குறித்தும் பிரஸ்தாபித்தார்.
இதற்குப் பதிலளித்த சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் கேதீஸ்வரன் யாழ் போதனா வைத்தியசாலை உட்பட தெல்லிப்பழை பிரதேச சைத்தியசாலையையும் தரமுயர்த்த வேண்டுமென்று விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற கூட்டத்தில் ஆராயப்பட்டதாகவும் யாழ் போதனா வைத்தியசாலை அவ்வாறு தரமுயர்த்த முடியாதென்றும் தெல்லிப்பழை வைத்திய சாலையை தரமுயர்த்துவதாயின் அது மாகாண அரசின் ஆளுகையிலிருந்து மத்திய அரசின் ஆளுகைக்குள் வந்தால் உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதற்க கடும் எதிரப்பை வெளியிட்ட சிவாஜிலிங்கம் மாகாணத்திலிருந்து எல்லாம் மத்திக்கு வர வேண்டுமென்று எவ்வாறு கூற முடியுமெனவும் கேள்வியெழுப்பியதுடன் உயிரைக்காக்க வேண்டிய அவசியம் இருப்பதால் எதுவானாலும் பரவாயில்லை முதலில் உயிர்காக்கும் செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
இதன் போது எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் மாவட்டத்தின் பல இடங்களிலும் நாய்கள் அதிகமாகக்காணப்படுவதாகவும் , யாழ் போதனா வைத்தியசாலையிலும் காணப்படுவதாக கூறினார்.
இதன் போது கருத்து வெளியிட்ட போதனா வைத்தியசாலை பணிப்பாளர் யாழ் போதனா வைத்தியசாலையில் அவ்வாறு நாய்கள் இல்லை என்று பதிலளித்தார். அத்தோடு இந்த நாய்க்கடிக்கு இலக்காகி தினமும் 30 இற்கும் மேற்பட்டவர்கள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.