பாகிஸ்தானில் வாக்குச்சாவடி அருகே நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலியானதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தானின் 272 பாராளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் மூலம் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க இன்று வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. அத்துடன் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர்பக்துன்க்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
இதனால் நாடுமுழுதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளநிலையில், பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவேட்டாவில் வாக்குச்சாவடி அருகே இவ்வாறு தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில், மூன்று காவற்துறையினர் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்பட 26 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 35-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
உடலில் குண்டுடன் சென்ற பயங்கரவாதி வாக்குச்சாவடி மையத்திற்கு உள்ளே சென்று தாக்குதல் நடத்த முயற்சி செய்ததாகவும்,. ஆனால், அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவற்துறையினர் பயங்கரவாதியை தடுத்து நிறுத்தும்போது அவர் குண்டை வெடிக்க செய்ததாக காவற்துறை டிஐஜி அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.
மேலும், தாக்குதல் நிகழ்ந்த பகுதியில் வெடிக்காத நிலையில் இருந்த வெடிகுண்டு ஒன்றை வெடிகுண்டு அகற்றும் நிபுணர் குழு செயலிழக்கச் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெறும் தினத்தில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதல் சம்பவத்தினால் பாகிஸ்தானில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.