குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முள்ளிக்குளம் மக்களின் காணிகள் மற்றும் வீடுகளில் வசித்து வருகின்ற கடற்படையினரை உடனடியாக வெளியேற்றி மக்களை மீள் குடியேற்றம் செய்ய ஜனாதிபதி மற்றும் பிரதமர் துரித நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ள வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த முள்ளிக்குளம் மக்கள் தங்கள் காணிகளுக்குள் சுமார் ஒரு வருடங்களின் பின் கடந்த புதன் கிழமை(18) கால் பதித்துள்ளனர். குறித்த மக்கள் காடுகளை துப்பரவு செய்து எவ்வித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் தற்காலிய கூடாரங்களை அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.
அந்த மக்களை இன்று புதன் கிழமை(25) காலை சிவசக்தி ஆனந்தன் தலைமையில், மன்னார் நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ்,மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களான மரிய சீலன்,ஜீவகன்,ஏ.றொஜன் ஆகியோர் நேரடியாக சென்று பார்வையிட்டு அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினர்.
அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவ்வாறு தெரிவித்தார்.
மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் கிராம மக்கள் தமது பூர்வீக கிராமத்திற்கு கடந்த ஒரு வராத்திற்கு முன்னர் செல்ல முயன்றுள்ள போதும் கடற்படையினருடைய அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த மக்கள் தற்காலிகமாக முள்ளிக்குளம் ஆலயத்திற்கு முன்பாக செட்டியார் குளம் என்ற ஒரு குளக்காணிக்குள் சுமார் 50 குடும்பங்கள் வரை மரங்களுக்கு கீழே பிள்ளைகளுடன் குடியேறியுள்ளனர். இது வரை குறித்த 50 குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை.குறிப்பாக அவர்களுக்கு தேவையான உலர் உணவுகள், தரப்பால்கள், குடி நீர் வசதி போன்றவை ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை.
அங்குள்ள பங்குத்தந்தை மற்றும் அருட்சகோதரர்களின் உதவியுடன் அந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். குறித்த கிராம மக்கள் கடந்த ஒரு வருடத்திற்கு முன் சுமார் 38 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
போராட்டத்தின் பின் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் ஒரு வருட காலம் கடந்துள்ள நிலையில் இது வரை நிறைவேற்றப்படாத நிலையில் மக்கள் கடந்த ஒரு வராத்திற்கு முன் தமது காணிகளுக்குள் சென்றுள்ளனர்.
-தற்போது அந்த மக்கள் இருக்கின்ற இடத்தில் இருந்து சுமார் நூறு மீற்றர் தொலைவில் முள்ளிக்குளம் மக்கள் வியர்வை சிந்தி கட்டிய வீடுகளில் கடற்படையினரும்,அவர்களுடைய குடும்பத்தினரும் வசித்து வருகின்றனர்.
-ஆனால் குறித்த வீடுகளுக்கு சற்று தொலைவிலே முள்ளிக்குளம் கிராம மக்கள் பற்றைக்காட்டினுள் பல்வேறு துயரங்களுக்கு மத்தியில் வசித்து வருகின்றனர்.
இந்த நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் சமாதானம் வர வேண்டும் என கூறுகின்ற நிலையில் முள்ளிக்குளம் மக்களினுடைய வீடுகளில் இருக்கின்ற கடற்படையினரை உடனடியாக குறித்த வீடுகளில் இருந்து அகற்றி முள்ளிக்குளம் கிராம மக்களுக்கு அந்த வீடுகள் , அவர்களின் காணிகள் வழங்கப்பட வேண்டும். அவற்றை செய்வதன் ஊடாகவே உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்.
வெறுமனவே வாய்ப்பேச்சு மூலம் முன்னால் ஜனாதிபதியும், தற்போதைய ஜனாதிபதியும் தெரிவிக்கின்றனர்.
யுத்தம் முடிவடைந்து 10 வருடங்களாகப் போகின்ற நிலையில் சொந்த கிராமத்திலே மீளக்குடியேற முடியாத நிலையில் இந்த மக்கள் ஒரு பரிதாபத்திற்கூறிய நிலையிலே இருக்கின்றார்கள்.
-ஆகவே இந்த மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.இவ்விடையம் தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் தொடர்பு கொண்டு இந்த மக்களுக்கு தேவையான தற்காலிக கூடாரங்கள் அமைத்தல்,உலர் உணவு,குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு கேட்டுள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.