232
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெற்று வருகின்ற நடமாடும் சேவையில் கிளிநொச்சி மாவட்டத்தில் 48 பிரச்சிணைகள் முன்வைக்கப்பட்டு நிலையில் அவற்றுக்கு தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது
வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரனின் வழிகாட்டுதலுடனும் பங்கு பற்றுதலுடனும் வடக்கு மாகாண மாணவர்களுக்கு வினைத்திறனான கல்வியை வழங்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டுவரும் க.பொ.த சாதாரணதர மாணவர்களின் பரீட்சை பெருபேற்று அடைவு மட்டத்தை உயர்த்துவதற்கான செயலமர்வும், அதிபர்,ஆசிரியர்கள்,கல்வி சாரா ஊழியர்களின் நிர்வாக ரீதியிலான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் கல்வி அமைச்சின் நடமாடும் சேவையும் நேற்று (24)கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்தில் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் குயின்ரன் தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக காலை 9.00 மணி தொடக்கம் மதியம் 2.00 மணிவரையும் 2018 ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரணதர பீட்சைக்குத் தோற்ற இருக்கும் மாணவர்களின் பரீட்சை அடைவு மட்டத்தை உயர்த்துவதற்கான வழிமுறைகள் அடங்கிய செயலமர்வு இடம்பெற்றது. இதில் கிளிநொச்சி கல்வி வலயத்தில் உள்ள க.பொ.த சாதாரண தர வகுப்புக்களைக்கொண்ட பாடசாலைகளின் அதிபர்கள் கலந்து கொண்டனர்.
அதிபர்களுக்கான செயலமர்வு நிறைவடைந்ததும் கிளிநொச்சி கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்கள்,ஆசிரியர்கள்,கல்வி சாரா ஊழியர்களின் நிர்வாக ரீதியிலான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் மாகாண கல்வி அமைச்சின் நடமாடும் சேவை இடம்பெற்றது. இந்த நடமாடும் சேவைக்கு 48 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று அவை அனைத்துக்கும் உடனடியாக தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
அதிபர்களுக்கான இன்றைய செயலமர்வில் வடக்கு மாகாண கல்வி,பண்பாட்டலுவல்கள்,விளையா ட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன், மாகாண கல்விப்பணிப்பாளர் உதயகுமார், மாகாண பிரதிக் கல்விப்பணிப்பாளர் பிரட்லி,கல்வி அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் அனந்தராஜ்,கிளிநொச்சி வலயக் கல்விப்பணிப்பாளர் குயின்ரன் ஆகியோரும் மாலை நடைபெற்ற நடமாடும் சேவையில் மேற்குறிப்பிட்ட அதிகாரிகளுடன் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் அவர்களுடன் மாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகள்,மாகாண கல்வித்திணைக்கள அதிகாரிகள்,கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தமது சேவைகளை வழங்கினர்.
Spread the love