கேரளாவில் உதயகுமார் என்பவர் தடுப்புக் காவலில் இருந்த போது உயிரிழந்த வழக்கில் 2 காவற்துறையினருக்கு மரண தண்டனையும், 3 காவற்துறையினருக்கு மூன்றாண்டு சிறை தண்டனையும் விதித்து சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
திருவனந்தபுரம் அருகே கரமனை, நெடுங்காடு பகுதியைச் சேர்ந்த உதயகுமார், திருவனந்தபுரம் கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனது நண்பர் சுரேஷ்குமார் என்பவருடன் ஸ்ரீகண்டேஷ்வரம் பகுதியில் நடந்து சென்றனர்.அவர்களை கோட்டை காவற்துறையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்தனர். சுரேஷ்குமார் மீது பல்வேறு வழக்குகள் இருந்ததால் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
உதயகுமார் கையில் ரூ.4 ஆயிரம் பணம் இருந்தது. இதனால் அவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் பணம் வைத்திருந்தது பற்றி விசாரணை இடம்பெற்றுள்ளது. அவர், ஓணம் பண்டிகைக்காக தான் பணியாற்றுகின் கடை உரிமையாளர் அளித்த போனஸ் பணம் என்று கூறினார்.
இதனை நம்ப நம்ப மறுத்த காவற்துறையினர் அவரை கடுமையாக தாக்கி சித்திரவதை செய்துள்ளனர். மறுநாள் அவரை திருவனந்தபுரம் அரசு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதும் அங்கு சிகிச்சை பலனின்றி உதயகுமார் இறந்து போனார்.
இந்த சம்பவம் குறித்து உதயகுமாரின் தாயார் பிரபாவதி காவல் நிலையத்தில் முறையிட்டார். தனது மகனை அடித்து கொன்றுவிட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மனு கொடுத்தார்.
அந்த மனுவை காவற்துறையினர் கிடப்பில் போட்டதற்கு எதிராக கேரள உயர் நீதிமன்றில் பிரபாவதி வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் உதயகுமாரின் மரணம் தொடர்பான மர்மத்தை கண்டுபிடிக்க சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது
இதற்கமைவாக சி.பி.ஐ. விசாரணையில் திருவனந்தபுரம் கோட்டை காவல் நிலைய உதவி காவற்துறை அதிகாரி ஜிதகுமார், காவல் துறை உத்தியோகத்தர்கள் ஸ்ரீகுமார், சோமன் மற்றும் டி.எஸ்.பி. அஜித்குமார், எஸ்.பி.க்கள் ஷாபு, ஹரிதாஸ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன் மூலம் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு சி.பி.ஐ நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
பல ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் தீர்ப்பை திருவனந்தபுரம் சி.பி.ஐ. நீதிமன்றம் நேற்று அறிவித்தது. இதில், குற்றம் சாட்டப்பட்ட ஜிதகுமார், ஸ்ரீகுமார், சோமன் மற்றும் அஜித்குமார், ஷாபு, ஹரிதாஸ் ஆகிய 6 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி நசீர் தீர்பளித்தார்.
இதில், சோமன் இறந்துவிட்டதால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். உதவி எஸ்.ஐ ஜிதகுமார், ஸ்ரீகுமார் ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். டி.எஸ்.பி. அஜித்குமார், எஸ்.பி.க்கள் ஷாபு, ஹரிதாஸ் ஆகிய மூவருக்கும் மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது தனது மகன் கொல்லப்பட்டு 13 ஆண்டுகளுக்கு பின்னர் தனக்கு உரிய நீதி கிடைத்துள்ளதாக உதயகுமாரின் தாய் பிரபாவதி தெரிவித்துள்ளார் .