Home இலங்கை பயங்கரவாத விசாரணைப் பிரிவு மருத்துவர்களையும் பொது சுகாதார ஊழியர்களையும் தொழில்முறை ஒழுக்கநெறியில் இருந்து பிறழ பலவந்தப்படுத்துகிறது!

பயங்கரவாத விசாரணைப் பிரிவு மருத்துவர்களையும் பொது சுகாதார ஊழியர்களையும் தொழில்முறை ஒழுக்கநெறியில் இருந்து பிறழ பலவந்தப்படுத்துகிறது!

by admin
வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன் …

மத்தேயு  2.16 ஞானிகள் தன்னை ஏமாற்றியதை ஏரோது கண்டு மிகுந்த சீற்றங் கொண்டான். அவன் அவர்களிடம் கருத்தாய்க் கேட்டறிந்ததற்கேற்பக் காலத்தைக் கணக்கிட்டுப் பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான்.

2018 ம் ஆண்டு மே 25ம் திகதிக்கும் 30ம் திகதிக்கும் இடையில் கிளிநொச்சி மாவட்டத்தில் பிறந்த அனைத்துக் குழந்தைகளின் தகவல் விபரங்களையும்  பயங்கரவாத விசாரணைப் பிரிவு மருத்துவர்களிடம் இருந்தும் பொது சுகாதார ஊழியர்களிடம் இருந்தும் கோரியுள்ளதாக அறிக்கைகள் வெளிவந்துள்ளன (1) (2). இதன் விளைவாக கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மருத்துவர்களும் பொது சுகாதார ஊழியர்களும் மே 25க்கும் 30க்கும் இடையில் குழந்தைகளைப் பெற்ற தாய்மார்கள் தொடர்பான தகவல்களை தருமாறு பலவந்தப் படுத்தப்பட்டுள்ளார்கள். இவ்வாறாக தகவல்களை வெளிப்படுத்துவது நோயாளர்களின் தகவல்களை இரகசியமாக பேணவேண்டிய வைத்தியரின் கடப்பாட்டை மீறுவதனால்  இந்தச் செய்தியானது மருத்துவர்கள் மற்றும் பொது சுகாதார ஊழியர்கள் மத்தியில் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது. நோயாளர்களினால் வழங்கப்படும் தகவல்களின் இரகசியத் தன்மையை பேணும் ஒழுக்க நெறியானது மருத்துவர்களுக்கு மாத்திரம் அல்லாமல் தாதிகள், பொது சுகாதார மாதுக்கள் மற்றும் சுகாதார பராமரிப்பை வழங்கும் நிறுவனங்களுக்கும் பொருந்தும் (3).

ஐக்கிய இராச்சிய பொது மருத்துவ சபையானது நோயாளிகளின்  சொந்த தகவல்களை மூன்றாம் தரப்பான  வழக்கறிஞர், போலீஸ் அதிகாரிகள் அல்லது நீதிமன்ற அதிகாரிகளுக்கோ நோயாளரின் வெளிப்படையான சம்மதம் இன்றி மருத்துவர் வழங்குவதை சட்டத்தின்படி தேவைப்பட்டால் ஒழிய அல்லது நீதிமன்றம் உத்தரவிட்டால் ஒழிய அல்லது பொதுமக்களின் நலனுக்காக நியாயப் படுத்தக் கூடியதாக இருந்தால் ஒழிய வெளியிடக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்துள்ளது (4). இலங்கையில் இதே ஒழுக்கநெறி வழக்கத் தரங்களை செயற்படுத்தினால்  ஒரு மருத்துவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகளுக்கு  மேலே குறிப்பிட்ட கட்டளைவிதிகளை பூர்த்தி செய்தால் ஒழிய தகவல்களை வழங்க முடியாது என்பதுடன் அவர்கள் அவ்வாறான தகவல்களை வெளியிட்டால் இந்த நாட்களுக்கு இடையில் குழந்தை பெற்ற அனைத்து தாய்மாரையும் சந்தேக நபர்களாகவோ அல்லது பயங்கரவாதிகளுக்கு உதவுபவர்களாக நடத்துவதுடன் அவர்களை பார்க்க செல்வதுடன் அவர்கள்  பொலிசார் தகவல்களை பெறும் எல்லோருக்கும் தெரிந்த விசாரணை முறைக்கு உட்படுத்தப் படும் விளைவை உண்டாக்கும். பிரித்தானிய மருத்துவ சபையின் பரிந்துரையின் படி மற்றவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு சந்தர்ப்பத்தில் மாத்திரம் நோயாளர்களின் தகவல்களை வெளிப்படுத்துவதை நியாயப் படுத்த முடியும். இந்த உதாரணத்தில் ஒரு தாயார் பயங்கரவாத செயற்பாடுகளில் நேரடியாக ஈடுபட்டிருந்தால் பெரும்பாலும் அவரைப் பற்றிய தகவல்களை வெளிப்படுத்தலாம். ஆனால் இங்கே   பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகள் ஒரு பயங்கரவாத சந்தேக நபரை அவருடைய மனைவியின் குழந்தை பிறக்கும் திகதி மூலமாக கண்டுபிடிக்கும் அசாதாரண முறையை பின்பற்றுவதாக தோன்றுகிறது. பயங்கரவாத சந்தேக நபரின் மனைவியின் விபரங்கள் வெளிப்படுத்தப்படலாம் என்று யாராவது வாதாடினால் கூட ஏனைய அப்பாவித் தாய்மார்கள் எந்த குற்றச் செயல்களிலும் எடுபடாத நிலையிலும் மற்றவர்களுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாத நிலையில் அவர்களுடைய குழந்தை பெறும் திகதிகளை வெளிப்படுத்துவது எந்த வகையிலும் நியாயப் படுத்த முடியாது.

நோயாளர்கள் வழங்கும்  தகவல்களின் இரகசியத்தன்மை பேணப்படாவிட்டால் நோயாளர்கள் சுகாதார பராமரிப்பு வழங்குபவரிடம் நம்பிக்கையை இழப்பதோடு உணர்வுகளை தூண்டக் கூடிய தகவல்களை பரிமாற மாட்டார்கள் (5). இந்த எடுத்துக்காட்டில் தாய்மார்கள் அரசாங்க சுகாதார சேவைக்கு வழங்கப்படும் தகவல்கள் பாதுகாப்பு படையினருக்கு வெளிப்படுத்தப் படலாம் என்பதுடன் அதன் மூலமாக வெறுப்பை தரும் விசாரணைகளுக்கு உள்ளாகும் ஆபத்தில் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டால் எதிர்காலத்தில் அவர்கள் அரசாங்க சேவை வழங்கும் கிளினிக்குகளுக்கு வரமாட்டார்கள் என்பதுடன் அவர்களுடைய வீடுகளுக்கு பொது மருத்துவ மாதுகளும் ஏனைய சுகாதாரசேவை வழங்குபவர்களும் வந்து தகவல் சேகரிப்பதை வெறுக்கக்கூடும். இத்தகைய ஒரு நிலையானது அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கு ஈடாக இலங்கை அடைந்துள்ள மிகக் குறைவான கர்ப்ப கால இறப்புவீதம், குழந்தை இறப்பு வீதம் மற்றும் உயர்ந்த நோய் தடுப்பூசி ஏற்றும் வீதம் போன்ற பொது சுகாதார  சாதனைகளுக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும். மக்கள் சுகாதார பராமரிப்பு வழங்குனர்களுக்கு வழங்கிய முழுமையான ஒத்துழைப்பு மற்றும் இலங்கையில் உள்ள பொதுசுகாதார தொகுதியில் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையே நாங்கள் இந்த உயர்ந்த இலக்குகளை அடைய உதவியது. மருத்துவ ஒழுக்கநெறியில் அறிவுடைய ஒரு பொறுப்பு வாய்ந்த பொது சுகாதார அதிகாரியாக நான் அதிகாரத்தில் உள்ளவர்களிடமும் மருத்துவ சபை மற்றும் மருத்துவ சங்கங்களிடமும் மனித உரிமை அமைப்புகளிடமும் நோயாளர்களின் தகவல்களின் இரகசியத்தன்மை பேணப்படுவதறகும் தாய்மார்கள் சுகாதார சேவை வழங்குபவர்கள் மற்றும் பொது சுகாதார தொகுதியில் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு ஊறு விளைவிக்காது இருக்குமாறும் கோரும்  எனது அழைப்புக்கு ஆதரவு தருமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.  பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகள் குழந்தை பிறக்கும் தின தகவல்களை பயன்படுத்தி அனைத்து தாய்மார்களுக்கும்  தொல்லை கொடுப்பதை விடுத்து சந்தேக நபர்களை கண்டுபிடிக்கும் உத்திகளை மேம்படுத்த வேண்டும். இந்த சரியாக திட்டமிடாத முறையானது விவிலிய  ஏட்டில் குறிப்பிடப்பட்ட  பெத்தேலேகத்தில்  2000 வருடங்களுக்கு முன்னராக சந்தேகத்தில் குறிப்பிட்ட காலத்தில் பிறந்த அனைத்து   அப்பாவிக் குழந்தைகளையும்  படுகொலை செய்த சம்பவத்தையே எனக்கு நினைவு படுத்துகிறது.

வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன்
சபை ஏற்றுக் கொண்ட சமுதாய மருத்துவ நிபுணர்
ஒழுக்கநெறி வருகை நிலை விரிவுரையாளர் – கொழும்பு பல்கலைக்கழகம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More