குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
இளவாலை காவற்துறை பிரிவில் சட்டவிரோத கருக்கலைப்பு செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளம் பெண்ணை பிணையில் விடுவிக்க நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.
சட்டவிரோத கருக்கலைப்பு செய்த இளம் பெண் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என இளவாலைப் காவற்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது. அதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த காவற்துறையினர், மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நேற்று அறிக்கை தாக்கல் செய்தனர்.
குற்றஞ்சாட்டப்படும் இளம் பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பதால் அவரை விசாரணை செய்யுமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு மல்லாகம் நீதிவான் அறிக்கையிட்டார்.
அதனடிப்படையில் யாழ்ப்பாணம் நீதிமன்ற பதில் நீதிவான் வி.ரி.சிவலிங்கம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நேரில் சென்று விசாரணைகளை முன்னெடுத்தார். “குற்றஞ்சாட்டப்படுபவர் திருமணம் முடிக்கவில்லை. சகோதரியின் கணவருடன் தவறான உறவு காரணமாக கர்ப்பவதியாகினார். இளம் பெண் 4 மாதங்களில் மாத்திரைகளை உள்கொண்டு சட்டவிரோதமாக கருக்கலைப்புச் செய்துள்ளார்.
வறுமைக்கோட்டுக்கு உள்பட்ட குடும்த்தைச் சேர்ந்தவராக இருப்பதால் அவருக்கு பிணை வழங்குவதில் ஆட்சேபனையில்லை” என்று இளவாலைப் காவற்துறையினர் பதில் நீதிவானிடம் சமர்ப்பணம் செய்தனர்.
விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் நீதிமன்ற பதில் நீதிவான் வி.ரி.சிவலிங்கம், சந்தேகநபரை காவற்துறை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டதுடன், வழக்கை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முன்னெடுக்க காவற்துறையினரை அறிவுறுத்தினார்.