பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள இம்ரான்கானின் கட்சி, பெரும்பான்மை ஆசனங்களை பெற்றுக்கொள்ளாமையினால் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான பணியில் தீவிரமாக உள்ளது.
பாகிஸ்தானில் 270 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் பஞ்சாப், சிந்து, பலுச்சிஸ்தான், கைபர் பக்துன்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் சேர்த்து கடந்த புதன் கிழமை தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்து வாக்குகள் எண்ணும் எண்ணும் பணி ஆரம்பமானது. வாக்கு எண்ணிக்கையின் போது தொடக்கத்தில் இருந்தே இம்ரான் கானின் தெஹ்ரீக் இ–இன்சாப் கட்சி முன்னிலை வகித்தது. எனினும், 50 சதவிகித வாக்குகள் எண்ணப்பட்டதும் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. தொழில்நுட்ப காரணங்களால் வாக்கு எண்ணப்படுவது நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது.
நவாஸ் ஷரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி, பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் இந்த தேர்தல் முடிவை ஏற்கப்போவதில்லை என அறிவித்தன. தேர்தலில் குளறுபடி நடந்து இருப்பதாக குற்றம் சுமத்தியிருந்தன.இதற்கிடையே நிறுத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கை மீண்டும் ஆரம்பமானது. தற்போது வரை 95 சதவிகிதமான வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. இம்ரான்கானின் பிடிஐ கட்சி 115 இடங்களிலும், பாக். முஸ்லிம் லீக் கட்சி 62 இடங்களிலும், பாக். மக்கள் கட்சி 43 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது என அறிவித்தாலும், எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து மக்களுக்காக பாடுபட தயார் என பாக். முஸ்லிம் லீக் கட்சி தற்போது அறிவித்துள்ளது. இம்ரான்கான் பிரதமராவததில் பிரச்சனை இல்லை என தெரிவிக்கப்படுகிறது.எனினும், பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 137 தொகுதிகள் தேவை. எனினும், இம்ரான்கானின் வசம் தற்போது 115 தொகுதிகள் உள்ளன. வாக்கு எண்ணிக்கை முடிவில் கூடுதலாக 5 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.எனினும், 20 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இதனால், சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் உடனான பேச்சுவார்த்தையை அவர் மேற்கொண்டு வருவதாக பாகிஸ்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, உள்நாட்டு பாதுகாப்பு, பயங்கரவாத இயக்கங்களை ஒடுக்க வேண்டியதில் அமெரிக்காவின் அச்சுறுத்தல், எல்லை பாதுகாப்பு, பொருளாதார சரிவு என பல பிரச்சனைகளை அவர் உடனே சீர்செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகி உள்ளார்.மறுபுறம் பாராளுமன்ற தேர்தல் முடிவுக்கு மாறாக பஞ்சாப் மாகாண சபை தேர்தலில் இம்ரான்கானின் கட்சியை விட நவாஸ் ஷரீப்பின் கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. எனினும், ஷரீப் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாததால், சுயேட்சைகள் மற்றும் சிறிய கட்சிகளை தன்வசப்படுத்தி அங்கும் ஆட்சியமைக்கும் முயற்சியில் இம்ரான்கான் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக பாகிஸ்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.