கடந்த சில நாள்களாக உடல் நிலை மோசமடைந்து வீட்டிலேயே மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்துவந்த திமுக தலைவர் கருணாநிதி தனது 94ஆவது வயதில் இந்திய நேரம் வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு மேல் ஆம்புலன்சில் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் உடல் நிலை சீரடைந்துள்ளதாக அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் கூற்றிலும், மருத்துவமனையில் இருந்து வெளியான அறிக்கையிலும், உடல் நிலை சீரடைந்துள்ளதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவு திடீர் சிக்கல்
கடந்த சில நாள்களாக அவரது உடல் நிலை மோசமடைந்த நிலையில், தற்போது அவரது உடல் நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாகவும், நோய்த் தொற்று குறைந்து வருவதாகவும் திமுக செயல் தலைவரும் அவரது மகனுமான மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கடந்து கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டுக்கு அவரது மகனும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்றார். ஆ.ராசா, துரைமுருகன் உள்ளிட்ட தலைவர்களும் கூடவே சென்றனர். உறவினர்கள், தலைவர்கள் குவியத் தொடங்கினர். சில வைத்தியர்களும் சென்றிருந்தனர். இதனையடுத்து சுமார் 12.15 மணிக்கு காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் சென்றது.
தொண்டர்கள் கூட்டம் அதற்குள் வீட்டின் முன்பு அதிகமானது. சுமார் இந்திய நேரம் 12.20க்கு கருணாநிதியை அழைத்துக் கொண்டு ஆம்புலன்ஸ் காவேரி மருத்துவமனை நோக்கிப் புறப்பட்டது. உடன் ஸ்டாலின் சென்றார்.
காவேரி மருத்துவமனையில் தற்போது கருணாநிதி சேர்க்கப்பட்டுள்ளார். மருத்துவமனை முன்பும் தொண்டர்கள் குவிந்துவருவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை நள்ளிரவு அளவில் கருணாநிதி உடல் நிலையில் திடீர் சிக்கல் ஏற்பட்டதாக செய்தி வெளியானதும் வெளியிலிருந்த குடும்ப உறுப்பினர்கள் பலரும் மீண்டும் கோபாலபுரம் சென்றனர். அப்போது கருணாநிதியின் மகளும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி வேறொருவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றதாக நேரில் பார்த்த திமுக பிரமுகர் ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
“ரத்த அழுத்தம் சீரானது“
20 நிமிட சிகிச்சைக்குப் பின் கருணாநிதியின் ரத்த அழுத்தம் சீரடைந்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, மருத்துவமனை முன்பாக செய்தியாளர்களிடம் கூறினார்
இதனிடையே காவேரி மருத்துவமனையில் இருந்து வெளியான மருத்துவ அறிக்கையில், “கருணாநிதியின் ரத்த அழுத்தம் திடீரென குறைந்ததை அடுத்து காவேரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஜூலை 28-ம் திகதி அதிகாலை 1.30க்கு அவர் சேர்க்கப்பட்டார். மருத்துவ மேலாண்மை மூலமாக அவரது ரத்த அழுத்தம் சீர்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவ வல்லுநர் குழுவினால் அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016 முதல்…
2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து உடல் நலக் குறைவின் காரணமாக வீட்டிலேயே ஓய்வெடுத்துவருகிறார் கருணாநிதி. அவர் மூச்சு விடுவதை எளிதாக்க அவருக்கு ட்ராக்யோஸ்டமி குழாயும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம், ட்ராக்யோஸ்டமி குழாய் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாற்றப்பட்டது. இதற்குப் பிறகு அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதாக செய்திகள் பரவின.
சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று
கடந்த புதன்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.கவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், கருணாநிதிக்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாகவும் பயப்படும்வகையில் ஏதும் இல்லையென்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், கருணாநிதிக்கு சிகிச்சையளித்துவரும் காவிரி மருத்துவமனை செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்தச் செய்திக் குறிப்பில் அவருக்கு சிறுநீரகப் பாதையில் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனைக் குணப்படுத்த தேவையான மருந்துகள் வழங்கப்பட்டுவருவதாகவும் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திலேயே மருத்துவமனைக்கான வசதிகள் செய்யப்பட்டு, 24 மணி நேரமும் மருத்துவர்கள் அடங்கிய குழு அவரைக் கண்காணித்துவருவதாகவும் கூறப்பட்டது.