குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தென்மராட்சி பகுதியில் தம்மை காட்டிக்கொடுத்த நாயை வெட்டி சாய்த்துவிட்டு திருடர்கள் தலைதெறிக்க ஓடித்தப்பியுள்ளனர். தென்மராட்சி சரசாலை வடக்கு பகுதியில் வீடொன்றினுள் நேற்று சனிக்கிழமை காலை வீட்டார் வெளியில் சென்று இருந்த சமயம் திருட்டு முயற்சிக்காக திருடர்கள் குறித்த வீட்டினுள் புகுந்துள்ளனர்.
அதன் போது வீட்டில் வளர்க்கப்படும் நாய் திருடர்களை கண்டு தொடர்ச்சியாக குரைத்துள்ளதனால் ஆத்திரமடைந்த திருடர்கள் நாயை வெட்டி படுகொலை செய்துள்ளனர்.நாய் திடீரென குரைத்து , பின்னர் நாயின் சத்தத்தை காணாததால் அயலவர்கள் குறித்த வீட்டு பக்கம் சென்ற போது , திருடர்கள் அயலவர்களை கண்டு தப்பியோடியுள்ளனர்.அயலவர்கள் ஒன்று திரண்டு திருடர்களை துரத்திய போதிலும் திருடர்கள் தப்பித்து ஓடியுள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் சாவகச்சேரி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
அதேவேளை சாவகச்சேரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட மீசாலை பகுதியில் வீடொன்றில் வெள்ளிக்கிழமை இரவு திருட்டு முயற்சிக்காக திருடர்கள் வீட்டினுள் உட்புகுந்த போது , வீட்டார் அபாய குரல் எழுப்பியதை அடுத்து திருடர்கள் தப்பி சென்றனர். என்பதும் குறிப்பிடத்தக்கது.