புதிய அரசமைப்பின் ஊடாக நாட்டைப் பிளவுபடுத்த முயற்சிப்பதாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் பொய்யானவை எனவும் புதிய அரசமைப்பின் ஊடாகத் தீர்வு கிடைக்காமல் போனால் நாடு பிளவுபடுவதை தடுக்க முடியாது எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் புதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் முக்கிய உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பு தொடர்பில் அவர் கூறிய கருத்துக்கள்
அரசமைப்பை விரைவாகத் தயாரிக்க வேண்டும் என்பதே எமது நோக்கம். அதற்காகவே நாம் எமது முழு நேரத்தையும் இந்த நடவடிக்கைகளுடன் செலவழிக்கின்றோம். நாம் அதனைக் கையாளும்போது அதில் பக்கச் சார்பு உள்ளதாகக் கூறுகின்றார்கள். புதிய அரசமைப்பைத் தடுப்பது யார் என்பது இவர்களின் கருத்தின் மூலமாகவே வெளிப்படுகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் தனி அணியாக உள்ளவர்கள் மற்றும் மகிந்த அணி உறுப்பினர்களே அரசமைப்பைத் தடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இவர்களுக்கு இந்த நாட்டில் தீர்வு கிடைக்க வேண்டும் என்ற தேவை இல்லை.
நாம் வழிநடத்தல் குழுவுக்கு ஆலோசனை வழங்கும் நிபுணர் குழுவுடன் முரண்பட்டதாக ஆரம்பத்தில் கூறினார்கள். ஆனால் எமக்கும் நிபுணர் குழுவுக்கும் இடையில் எந்த முரண்பாடுகளும் இருக்கவில்லை. எமது தனிப்பட்ட தலையீடுகள் எதுவும் அதில் இருந்ததில்லை. வழிநடத்தல் குழுவில் என்ன நடைபெறுகின்றது என்பது தெரியாது இவர்கள் ஊடகங்கள் முன்பாக பொய்யான காரணிகளைக் கூறிவருகின்றனர்.
நிபுணர்குழு சுயாதீனமாகக் கூடி முடிவெடுக்கும். இதனை நான் வழிநடத்தல் குழுவில் தெரிவித்தேன். அரசமைப்புச் சபையின் பிரத்தியேகச் செயலர்கூட நிபுணர் குழுவின் கூட்டங்களில் கலந்து கொள்ளக்கூடாது என்பதையும் தெரிவித்துள்ளேன்.
நாட்டைப் பிளவுபடுத்தும் கூட்டாட்சி அரசமைப்பை உருவாக்குவதாகக் குற்றஞ்சுமத்துகின்றனர். இந்த நாட்டினை துண்டாடக்கூடாது என்பதற்காகவே நாம் புதிய அரசமைப்பை உருவாக்க முயற்சிக்கின்றோம். புதிய அரசமைப்பில் தீர்வுகள் இல்லாது போகும் பட்சத்தில் நாடு பிளவுபடுவதைத் தடுக்க முடியாது. உருவாக்கப்படும் புதிய அரசமைப்பில் பிளவுபடாத நாடு, சகல மக்களுக்கான உரிமைகள் என்பன உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் மிக முக்கியமாக, இதுவரை அரசமைப்புகளில் இல்லாத புதிய விடயத்தை உள்ளடக்கியுள்ளோம்.அரசு நினைக்கும் நேரத்தில் மாகாண சபையைக் கலைக்க முடியும். இவ்வாறான ஆரோக்கியமான, தேசிய பாதுகாப்பு பாதிக்கப்படாத சரத்துக்களை நாம் உருவாக்கியுள்ளோம்.
அதேபோல் சிறுபான்மை மக்களின் நலன் சார்ந்த, அவர்கள் ஏற்றுக்கொள்ளும் நகர்வுகளைக் கொண்ட அரசமைப்பாக அதனை உருவாக்கி வருகின்றோம். இதனை சகல தரப்பினரும் ஏற்றுகொள்ள வேண்டும். நாடாளுமன்றத்தில் சகல தரப்பினதும் ஆதரவு இதற்கு அவசிமாகின்றது. எம்மைக் குறைகூறும் டிலான், சுசில், தினேஷ் போன்றவர்கள் அரசமைப்பை ஆதரிப்பார்களா என்பதை தெரிவிக்கவேண்டும் என கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார்.