குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்பில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோவின் உத்தியோபூர்வ இல்லத்திற்குள் நுழைய முயற்சித்தமை சம்பந்தமாக கைதுசெய்யப்பட்ட ராஜாங்க அமைச்சர் வீ. ராதாகிருஷ்ணனின் சாரதி எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மிரிஹான பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து சந்தேக நபர் இன்று அதிகாலை 3 மணியளவில் கைதுசெய்யப்பட்டதாக காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. கைதுசெய்யப்படும் போது சந்தேக நபர் மது போதையில் இருந்தாக காவற்துறையினர் கூறியுள்ளனர். எந்த காரணத்திற்காக சந்தேக நபர் அருந்திக பெர்னாண்டோவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் நுழைய முயற்சித்தார் என்ற தகவல் வெளியாகவில்லை. சம்பவம் குறித்து மிரிஹான காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.