பீகாரில் பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த மேலும் 5 சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ளமை மருத்துவ அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. பீகாரின் முசாபர்பூர் நகரில் மாநில அரசு உதவி பெறும் சிறுமிகள் பாதுகாப்பு இல்லத்தில் 4 வயது முதல் 18 வயது வரையுள்ள பேச்சு குறைபாடு கொண்ட 44 சிறுமிகள் தங்கியிருந்த நிலையில் இவர்களில் பலர் பாலியல் பலாத்காரத்துக்குட்படுத்தப்பட்டிருந்தமை அண்மையில் தெரிய வந்திருந்தது.
மும்பையைச் சேர்ந்த அறிவியல் நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரிய வந்ததனைடுத்து இது தொடர்பாக பீகார் மாநில சமூக நலத்துறைக்கு அறிக்கை அளிக்கப்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த சிறுமிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் முதல் கட்டமாக 29 பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது, உறுதிப்படுத்தப்பட்டதனையடுத்து பாதுகாப்பு இல்லத்தின் உரிமையாளர் உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைத்த நிலையில் குறித்த வழக்கை சி.பி.ஐ. நேற்றையதினம் பொறுப்பேற்றுக் கொண்டது. இந்த நிலையில், இரண்டாம் கட்ட மருத்துவ அறிக்கையில் மேலும் 5 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது, நேற்று தெரிய வந்துள்ள நிலையில் பாதுகாப்பு இல்லத்தில் பாலியல் பலாத்காரத்துக்குட்டப்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது