குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னார் முருங்கனில் ஆலய வழிபாட்டுக்கு நேற்று (29) ஞாயிற்றுக்கிழமை பெற்றோருடன் சென்ற 2 வயதுச் சிறுவன் கடத்தப்பட்டு சுமார் 4 மணி நேரத்தில் காவல்துறையினரினால் மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,,,
முருங்கன் பகுதியில் உள்ள ஆலயத்துக்குப் பெற்றோருடன் 2 வயதுடைய சிறுவன் நேற்று (29) மதியம் 1 மணியளவில் சென்றுள்ளார். சிறிது நேரத்தின் பின்னர் சிறுவனை ஆலய பகுதியினுள் காணாத நிலையில் பெற்றோர் தேடியுள்ளனர். எனினும் சிறுவனை அங்கே காணவில்லை.
உடனடியாக பெற்றோர் முருங்கன் காவல் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ததோடு,சிறுவனின் உறவினர் ஒருவர் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் கவனத்திற்கும் கொண்டு சென்றனர்.
இந்த நிலையில் காவல்துறையினர் துரித நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில் ஆலயத்திற்கு வந்த திருக்கோவிலைச் சேர்ந்த ஒருவர் வழிபாடு முடிவடைவதற்கு முன் ஆலயத்தில் இருந்து வெளியே சென்றமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதனையடுத்து உடனடியாக திருக்கோவில் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதன் போது குறித்த நபர் வவுனியா பேருந்து நிலையத்திலிருந்து மன்னார் நோக்கிச் செல்லும் பேருந்தில் சந்தேக நபர் சிறுவனுடன் ஏறியதை அவதானித்த வவுனியா காவல்துறையினர் குறித்த நபரை கைது செய்ததுடன் குறித்த சிறுவனையும் மீட்டுள்ளனர்.
சிறுவனைக் கடத்தியமைக்கான காரணம் இது வரை வெளியாகவில்லை. காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.