குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தன் உற்சவ காலங்களில் மாநகர சபையால் கடைகள் வழங்கப்படுவது தொடர்பில் சபையில் எந்தவித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியியலாளர் சந்திப்பின் போது நல்லூர் திருவிழா காலங்களில் மாநகர சபையால் வழங்கப்படுகின்ற கடைகள் குறித்து எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலையே மணிவண்ணண் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது விடயம் குறித்து மேலும் தெரிவிக்கையில்..
நல்லூர்க் கந்தன் திருவிழா காலங்களில் மாநகர சபையால் கடைகள் வழங்கப்பட்டு வருவது வழமை. ஆனால் அந்தக் கடைகள் வழங்கலில் கடந்த மாநகர சபை ஆட்சிக்ட காலங்களில் பாரிய முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஆகவே அத்தகைய முறைகேடுகள் இனியும் இடம்பெறாத வகையில் மாநகர சபையின் செயற்பாடுகள் அமைய வேண்டியது அவசியம்.
ஆனால் இம் முறை திருவிழாக் காலங்களில் கடைகள் வழங்குவது தொடர்பில் சபையில் எந்தவித தீர்மானங்களும் எடுக்கப்படாமல் கடைகள் வழங்கப்படுவதாக அறிகின்றோம். அதிலும் அந்தக் கடைகள் வழங்குவதில் பல உள்ளுர் வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
ஆகவே உள்ளுர் வர்த்தகர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அவர்களுக்குரிய கடைகளை அல்லது இடங்களை வழங்க வேண்டும். எமது வர்த்தகர்கள் பாதிக்கப்படாத வகையின் சபையின் செயற்பாடுகள் அமைய வேண்டும்.
ஆகவே நாளை நடைபெறவிருக்கின்ற சபை அமர்வின் போது உள்ளுர் வியாபாரிகளின் நலனைக் கருத்திற் கொண்டு ஒரு தீர்மானத்தை எடுக்கவிருக்கின்றோம்.
ஏனெனில் கடந்த காலங்களில் உள்ளுர் வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதே போன்று தற்போதும் உள்ளுர் வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆகவே இம் முறை உள்ளுர் வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகளை வழங்கப்பட வேண்டும். மேலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தைச் சேரந்த வியாரிகளுக்கும் அடுத்ததாக கடைகள் வழங்கப்பட வேண்டும்.
இதே வேளை கடந்த காலங்களில் நல்லூர்க் கந்தனின் புனிதத் தன்மைக்க களங்கம் ஏற்படுத்தும் வகையில் சில செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. அகவே இம் முறை அந்த விடயத்திலும் விசேட கவனமெடுத்துச் செயற்பபட வேண்டும்.
குறிப்பாக கடைகள் வழங்கலில் தனிநபர் செல்வாக்கு மற்றும் இலஞ்சம் என்பன கடந்த காலங்களில் காணப்பட்டதாகவும் ஆனாலும் இம் முறை அதற்கு இடமளிக்காத வகையிலும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
இவை எல்லாம் குறித்து விசேட கவனமெடுத்து சில தீர்மானங்களையும் நிறைவேற்றவுள்ள அதே வேளையில் சபையின் செயற்பாடுகள் தொடர்பில் கண்காணிப்புக்களை மேற்கொள்ள உள்ளதாகவும் மணிவண்ணண் மேலும் தெரிவித்தார்