Home இலங்கை “யாழ். மாநகரசபையில் என்னை முடக்குவதற்கும், அகற்றுவதற்கும் முயற்சி”

“யாழ். மாநகரசபையில் என்னை முடக்குவதற்கும், அகற்றுவதற்கும் முயற்சி”

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

யாழ். மாநகரசபையில் என்னை முடக்குவதற்கும், அங்கிருந்து அகற்றுவதற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏன் துடியாய் துடிக்கின்றனர் எனக் கேள்வியெழுப்பியிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசியஅமைப்பாளரும் மாநகர உறுப்பினருமான வி.மணிவண்ணண் அவ்வாறு என்னை அகற்றுவதனூடாக கூட்டமைப்பினர் எதனைச் சாதிக்கப் போகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடகஅமையத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றஊடகவியலாளர் சந்திப்பின் போது மாநகர சபை நிலைமைகள் குறித்து கருத்து வெளியிடுகையிலையே மணிவண்ணண் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,

யாழ்ப்பாண மாநகர சபையின் பிரதிமுதல்வர் எமது கட்சியின் உறுப்பினர் ஒருவரை அச்சுறுத்தியுள்ளார். இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருக்கின்றோம். மாநகர சபை பிரதி முதல்வராக இருக்கின்றவர் முன்னாள் ஆயுதக் குழு ஒன்றின் சார்பாகவே போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.
ஆகையினால் அவரிடம் ஆயுதங்கள் இருக்கின்றனவா என்றஅச்சம் எமக்கு ஏற்பட்டிருக்கின்றது.

ஆயினும் எமது உறுப்பினருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் நாம் உரியநடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கின்றோம். மாநகரசபையில் ஆளுங்கட்சியாக இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சபையில் எதிர்க்கட்சியாக இருக்கின்ற தமிழ்த் தேசியமக்கள் முன்னணியின் உறுப்பினர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளையும் எம்மை முடக்குகின்ற செயற்பாடுகளையுமே தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.

மாநகரசபையில் எமது கட்சியின் விகிதாசார முறைமையில் தெரிவான உறுப்பினராக இருக்கின்ற நான் சபையின் மராமத்துக் குழுவின் தலைவராகவும் இருக்கின்றேன்.

அத்தோடு சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் அவர்கள் தங்கள் தங்கள் வட்டாரத்திற்கான அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்து வருகின்றமை போன்று தேசியப் பட்டியல் உறுப்பினராக இருக்கின்ற எனக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் நானும் பல இடங்களில் அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்து வருகின்றேன்.

அவ்வாறு நான் அபிவிருத்திகளை முன்னெடுத்து அதனைக் குழப்பும் செயற்பாடுகளை கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மேற்கொள்கின்றனர். ஏனெனில் அவர்கள் தங்கள் வட்டாரங்களில் தாங்கள் தான் எதுவானாலும் செய்யவேண்டும். அங்கு வேறு யாரும் எந்தஅபிவிருத்தியும் செய்யக் கூடாதென்று கூறுகின்றனர்.

ஆனால் மாநகரசபையின் மராமத்துக் குழுவின் தலைவர் என்ற வகையில் சபை எல்லைக்குட்பட்ட எந்தப் பகுதிக்கும் சென்றுவரமுடியும்.

மக்களுக்கான அபிவிருத்திகளை முன்னின்று செயற்படுவதால் என்னை முடக்குவதற்கும் என்னை அகற்றுவதற்குமான சதிவேலைகளை கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மேற்கொண்டு வருகின்றனர். மாநகரசபையில் நல்லதிட்டங்களை மற்றும் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை மேற்கொள்கின்ற போது அதனை ஏன் தடுக்கின்றனர் அல்லது ஏன் விரும்புகின்றனர் இல்லை என்ற கேள்வி எழுகின்றது.

இது விடயங்களில் எனது கட்சியையும் என்னையும் பொறுத்தவரையில் சபை ஆரம்பிக்கப்பட்ட போதே முதல்வரின் அதிகார துஸ்பிரயோகங்களை நாங்கள் வெளிக் கொண்டுவந்ததாலும்,மாநகரத்தில் நடைபெறுகின்ற இரானுவத்தினரின் நிகழ்வுகளில் பங்குபற்றுவதில்லை எனச் சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு மாறாக சபை முதல்வர் கலந்துகொண்டமை தொடர்பில் சபையில் எதிர்ப்பு வெளியிட்டமை,பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கோரி சர்வவதேச விசாரணை வேண்டுமெனசபையில் முதல்வரின் எதிர்ப்புக்கள் மத்தியிலும் தீர்மானமாக கொண்டுவரப்பட்டமை ஆகிய காரணங்களால் என்னை இந்தச் சபையில் இருந்து அகற்றவேண்டுமென நினைக்கின்றனர்.

இதேவேளையில் எமது மக்களினதும் மாநகரத்தினதும் அபிவிருத்தி மற்றும் உரிமை, உட்பட நிதி சார் வேலைத் திட்டமாக இருந்தாலும் அதை எதிர்க்கின்ற அல்லது அதனை விரும்பாத வகையில் கூட்டமைப்பினர் செயற்படுகின்றனர்.

ஏனெனில் இவ்வாறு மக்களுக்காக நாம் செயற்படுகின்றபோது என்னை அகற்றினால் தாம் விரும்பியவாறு செயற்படலாமெனவும் கூட்டமைப்பினர் கருதுகின்றனர்.

இவ்வாறு என்னை அகற்றியோ அல்லது என்னுடைய செயற்பாடுகளைத் தடுத்தோ தாம் நினைத்தவாறு செயற்படலாமென அவர்கள் கருதுவது தவறு. அவர்கள் மக்களுக்காக அதனைச் செய்யவில்லை என்பதுடன் தங்களது சுயநல அரசியலையும் சுயலாபங்களுக்காகவமே செய்கின்றார்கள் என்பதேஉண்மை.

குறிப்பாக தற்போது எனது வட்டாரத்திலே நான் அபிவிருத்தி வேலை செய்வதை விரும்பாத சுயநலவாதி உறுப்பினர் ஒருவர் அதனைதடுத்திருக்கின்றார். ஆனால் அந்தவட்டாரத்தில் சபைக்கு ஆதனத்தை நான் கட்டிவருகிறேன். ஆகையினால் அங்கு எது செய்யவும் எனக்கு சுதந்திரம், உரிமை உண்டு. அதனை யாரும் கேள்விக்குட்படுத்த முடியாது என மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More