குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
500 நாட்களை தாண்டி வீதியில் கிடக்கும் தங்களுக்கு விரைந்து தீர்வு பெற்றுத்தருமாறு புதிதாக நியமனம் பெற்ற பிரதி அமைச்சர்களிடம் கேப்பாபுலவு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீலங்கா இராணுவத்தினர் சுபீகரித்து வைத்துள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பித்த நிலமீட்பு போராட்டம் ஒரு வருடத்தை தாண்டிய நிலையில் 518ஆவது நாளாக இன்றும்(31 ) இராணுவ முகாமிற்கு முன்னால் தொடர்கின்றது.
இந்நிலையில் தாம் இன்னும் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை என்பதனை கருத்தில் கொண்டு மீள்குடியேற்ற பிரதி அமைச்சராக பதவியேற்றுள்ள வன்னி தேர்தல் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தம்மை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரியுள்ளனர்.
அதேபோன்று தமது பகுதி மக்களின் பிரதான தொழில் விவசாயம் எனவே விவசாய பிரதி அமைச்சர் பதவியை பெற்றுக்கொண்ட அங்கஜன் இராமநாதன் வீதியில் கிடக்கும் இந்த விவசாய பெருமக்களை குடியேற்ற உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.