Home இலங்கை முன்னாள் போராளிகளைப் பிரித்துப் பார்க்க வேண்டாம் – வெற்றிச்செல்வி…

முன்னாள் போராளிகளைப் பிரித்துப் பார்க்க வேண்டாம் – வெற்றிச்செல்வி…

by admin

முன்னாள் போராளிகள் என்ன ரோபாக்களாக? கரண்டில்லாமல் போன உடனே வேலை செய்யாமல் போய்விட்டார்களா? ஏன் நாங்கள் அவர்களைப் பாரபட்சமாக நடத்துகிறோம்? நீங்கள் போராட்டத்தில் நின்ற ஆட்கள் என்று சொல்லி, நாங்கள் ஏன் ஒதுக்கி வைக்கின்றோம்?

எங்களுக்கு புனர்வாழ்வுப் பயிற்சி அளிக்கப்பட்டது என்கிறார்கள். சமூகத்தோடு மீள் இணைக்கின்றோம் என்கிறார்கள். எந்த சமூகத்தோடு இணைக்கின்றார்கள்? நாங்கள் எங்கிருந்து வந்தோம்? எங்கள் சமூகம் எது? எனது தந்தை, தாய், அக்கா, என்னுடைய மாமன், மாமி, மச்சாள், என்னுடைய உறவுகள் என்னுடைய குடும்பம், என்னுடைய வீடு, அயலவர்கள், என்னுடைய கிராமம் எல்லாவற்றோடும்தானே நாங்கள் வாழ்ந்தோம்? எங்களை ஏன் பிரித்துப் பார்க்க வேண்டும்? என்று எழுத்தாளரும், முன்னாள் பெண் போராளியுமாகிய வெற்றிச்செல்வி கேள்வி எழுப்பினார்.

யாழ் பொது நூலகத்தில் யாழ் பொது அமைப்புக்களின் அமையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற சர்வதேச பெண்கள் நிகழ்வில் விருந்தினராகக் கலந்து கொண்டு அவர் உரையாற்றியபோதே, இந்தக் கேள்விகளை அவர் எழுப்பினார்.  அங்கு உரையாற்றிய அவர் மாற்றுத்திறனாளிகளுக்கு சமூகத்தில் சம சந்தர்ப்பமும் உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அங்கு அவர் தெரிவித்ததாவது:

நாங்கள் எந்த சமூகத்தோடு மீள் இணைக்கப்படுகிறோம்? நாங்கள் எங்கிருந்து வந்தோம்? இங்கிருந்தவர்களையே இந்த சமூகத்தோடு இணைக்கிறார்களா? யார் இணைக்க வேண்டும்? புனர்வாழ்வு அளிப்பதற்கும், எங்களுடைய உள்ளத்தை ஆற்றுப்படுத்துவதற்கும், எங்களை வலுவூட்டுவதற்கும் எத்தனையோ நிகழ்ச்சித் திட்டங்கள் இங்கு நடந்திருக்கின்றன என்றார்கள். வலுவூட்டுவது என்பது என்ன? ஒவ்வொரு மனிதனும் தன்னளவில் தன்னை உணர்தலையே வலுவூட்டல் என்கிறோம். அந்த வலுவூட்டல் எங்கே சறுக்கியது? மூச்சுத் திணறல் ஏற்படும்போது முதுகில் இரண்டு தட்டு தட்டி, உனக்கு மூச்சு வந்துவிட்டது, ஓடு என்று எங்களுடைய சமூகம் எங்களைப் பார்த்து சொல்லவில்லை. பாவம் நீங்கள் என்றது. அதனால் எனக்கு சமூகத்தின் மீது சிறு கோபம் இருக்கின்றது.

குடும்பத்திலும் சமூகத்திலும் போராட வேண்டிய நிலை

எங்களை ஏன் பாவம் பார்க்கின்றீர்கள்? தனியே காட்டுக்குள் ஒன்றமே இல்லாமல், கொண்டுபோய் விட்டால்கூட, மரத்தில் படரும் கொடியை அறுத்து, தண்ணீரைக் குடித்து, பழங்களை உண்டு, ஒரு மாதம் தாண்டியும் உயிரோடு மீண்டுவரத் தெரிந்தவர்கள் பெண் போராளிகள். எதற்காக அவர்கள் ஒன்றுமில்லாமல் இருக்கின்றார்கள் என்ற சொல்லுகின்றீர்கள்? அதுதான் என்னுடைய கேள்வி. நீங்கள் அப்படிக் கருத வேண்டாம். எத்தனையோ பெண் போராளிகளை. போருக்குப் பின்னர், அவர்களை வீட்டுக்குள் முடக்கியது, அவர்களுடைய அம்மாக்களும், அப்பாக்களும், சகோதரர்களும்தான் என்று எனக்குத் தெரியும். ஆனால் பாதுகாப்பு என்பதை உயிர் அச்சுறுத்தல் என்று கருதினோம். யாருக்கு அந்த உயிர்ப்பயம் வந்திருக்க வேண்டும்?

பயிற்சி பெற்று என்னுடைய உயிர், உடல், ஆவி அனைத்தையும் இந்த மண்ணுக்காகக் கொடுப்பேன் என்று சத்தியம் செய்தவர்களுக்கா உயிர் அச்சம் வர வேண்டும்? அந்த அச்சுறுத்தல் இராணுவ மட்டத்தில் இருந்தும் பொலிசார் மட்டத்தில் இருந்தும் புலனாய்வாளர் மட்டத்தில் இருந்தும் மட்டுமல்ல. எங்களுடைய சமூக மட்டத்தில் இருந்தும் வந்தது. எங்களுடைய குடும்பத்தில் இருந்தும் வந்தது. இது மிகவும் துயரமானது.

சமூகத்திற்குள் நாங்கள் எங்களுக்காகப் போராட வேண்டிய நிலை வந்தது. எங்களுடைய அம்மாவை. சகோதரியை எதிர்த்து, என்னுடைய குடும்பத்திலும் என்னுடைய சமூகத்திலும், நான் போராட வேண்டியிருந்தது. அந்தப் போராட்டத்தின் பிரதிபிம்பங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கின்றன. விரல் விட்டு எண்ணக்கூடிய போராளிகள்தான், சமூகத்தில் வளமாக இன்றுவரை இருக்கின்றார்கள்.

எங்கே அவர்கள்?

போராளிகள் அனைவருமே, ஆயுதத்தை மட்டும் கையிலே பிடித்துக் கொண்டு, களமுனையில் நின்றவர்கள் அல்ல. அவர்கள் பெண்களை வலுப்படுத்தல், பெண்களுக்கான சட்டம், நீதி, நியாயம் அனைத்திற்காகவும் இயங்குகின்ற ஓர் அமைப்பையே தோற்றுவித்து, நடத்தியவர்கள். இதேபோன்ற சர்வதேச மாநாடுகளில் அவர்கள் கலந்து கொண்டு தமது உரிமைகளுக்காகக் குரல் கொடுத்திருக்கின்றார்கள்.

அவர்கள் பெண் உரிமை பேசுபவர்களாக மட்டுமல்ல, பெண்களுக்காக வாழ்ந்தார்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் தன்னம்பிக்கை ஊட்டுகின்ற நல்ல வழிகாட்டிகளாகத் இருந்தார்கள். குடும்பநல ஆலோசகர்களாக இருந்தார்கள். சட்டம் படித்திருந்தார்கள். நீதிபதிகளாக இருந்தார்கள். விவசாயம் செய்பவர்களாக இருந்தார்கள். சமையல் கலை தெரிந்தவர்களாகவும் இருந்தார்கள். கலைத்துறையில் இருந்தார்கள். படகு கட்டுமாண பிரிவில் படகு கட்டினார்கள். படகு செலுத்தினார்கள். ஆண்களுக்கு நிகராக, நீரடி நீச்சலில் வென்று முதல் பரிசு பெற்றார்கள்.

எங்கே அவர்கள் எல்லாம்? அவர்களை எல்லாம் காணாமல் ஆக்கியது யார்? நாங்கள் அவர்களைக் காணாமல் ஆக்கிவிட்டு, அவர்களுக்காக இரங்குகின்றோமா? தயவு செய்து இரங்க வேண்டாம்.

பாரபட்சமாகவோ பாவமாகவோ பார்க்க வேண்டாம்

முன்னாள் போராளி ஒவ்வொருவரும் இந்த மண்ணின் விடுதலைக்காக அவர்களாக முன்வந்து சென்றவர்கள். அவர்கள் ஈடுபாட்டோடு, அர்ப்பணிப்போடு நின்றார்கள். போர்க்களத்தில் அவர்கள் வென்ற பொழுது, எப்படி பாராட்டினீர்களோ அதே போன்று இப்பொழுதும் அவர்களைப் பாராட்டுங்கள். அதுதான் அவர்களைத் தட்டிக்கொடுப்பதற்காக நீங்கள் அவர்களுக்காகச் செய்யக்கூடிய ஒரே செயல். தயவு செய்து அவர்களை பாரபட்சமாக அல்லது பாவமாகப் பார்க்க வேண்டாம். அதுவே உங்கள் முன் இந்த சபையின் முன் இந்த உலகத்தின் முன் நான் முன்வைக்கின்ற மிகப் பெரிய செய்தி.

பேச்சளவிலும், எழுத்தளவிலும், கணக்களவிலும் மாற்றுத்திறனாளிப் பெண்களையும் நாங்கள் வைத்திருக்கின்றோம். இந்த நிலை மாற வேண்டும். மாற்றுத்திறனாளிப் பெண்களுக்கும் நான் இதையே சொல்வேன். ஒரு கண் இல்லாவிட்டால் என்ன, கை இல்லாவிட்டால் என்ன, இரண்டு கண்களும் இல்லாவிட்டாலும்தான் என்ன, வாழும் வல்லமையினால்தான் நிமிர்ந்து வாழ முடியும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் மட்டும்தான், அந்த நிமிர்வை நாங்கள் காட்டுகிறோம்.

ஊக்குவிக்க வேண்டும்

இந்த இடத்திற்கு வருவதற்காக நான் செய்த வேலைகள் பல்லாயிரம். ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு நாளும் நான் அர்ப்பணிப்போடும் உண்மையான உணர்வோடும் செயற்பட்ட ஒரே காரணத்தால்தான், என்னை இனங்கண்டார்கள். அங்கீகரித்தார்கள். அந்த வகையில்தான் இங்கே என்னை அழைத்தீர்கள்.

இனங்காணப்படாத எத்தனையோ மாற்றுத்திறனாளிகள் இந்த மண்ணில் உறுதியோடு இருக்கின்றார்கள். அவர்கள் குடும்பங்களின் நம்பிக்கைத் தூண்களாக இருக்கின்றார்கள். இவ்வாறான மாற்றுத்திறனாளிகளை நாங்கள் இனம் காண வேண்டும் அவர்களை முன்னுக்குக் கொண்டு வர வேண்டும். சாதனையாளர்களாக விருதுகளும் வழங்கி அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அது நாங்கள் அவர்களுக்குச் செய்கின்ற மிகப் பெரிய கௌரவமாக இருக்கும்.

மாற்றுத்திறனாளிகள் என்று குறிப்பிடும்போது, ஓரளவு நடமாடக் கூடியவர்களையே நாங்கள் யோசிக்கக் கூடும். உண்மையில் மாற்றுத்திறனாளிகள் பல்வகைமைக்குள் அடங்குவார்கள். படுக்கையில் இருக்கக் கூடிய மாற்றுதிறனாளிகளுக்கு வாழ்வாதாரம் அல்லது மாதம் மூவாயிரம் கொடுத்தால் போதும் என்கின்ற நிலைமை எங்களுடைய எண்ணங்களில் இருக்கின்றது. அவர்கள் எல்லோரும் வாழ வேண்டியவர்கள். அவர்களை கௌரவமாக வாழ வைக்க வேண்டும்.

கல்வியில் சிறந்த மாற்றுத்திறனாளிகள் சமூகத்தை உருவாக்க வேண்டும்

மாற்றுத்திறனாளிகள் எல்லோரும் சுயகௌரவம் உடையவர்கள். சிறந்த முறையில் தமக்கான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் வழியும் தெரிந்தவர்கள். அவர்களுக்கு நாங்கள் பக்கபலமாக இருக்க வேண்டும். வழிகாட்டிகளாக இருக்க வேண்டும். அவர்களோடு கொஞ்சதூரம் நடந்து, பின்னர் அவர்களை தாங்களாக நடக்க விட வேண்டும்.

சின்ன வயதில்; இருந்தே, அவர்களுடைய கோவில், அவர்களுடைய ஊரைப்பற்றி தெரியாமல், வீடுகளுக்குள்ளேயே வாழும் அந்த சின்னக் குழந்தைகளான மாற்றுத்திறனாளிகள் பற்றி யார் கவனம் எடுப்பது? அரச அதிகாரிகள், சிறுவர் பராமரிப்பு உத்தியோகத்தர்கள், கச்சேரி பிரதேச செயலகங்கள் மட்டுமல்ல. நாங்கள் அனைவரும் அவர்கள் மீது கவனம் எடுக்க வேண்டும். கல்வியை அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். அவர்களது தேவைகளை நிறைவேற்ற இந்த நாட்டிலே என்ன இருக்கின்றது? கல்வியில் சிறந்த ஒரு மாற்றுத்திறனாளிகள் சமூகத்தை உருவாக்குவது மிகப் பெரிய கடமை.

மாற்றுத்திறனாளி சிறுவர்களது நலன்கள் முக்கியம்

நான் வாழ்கின்ற பிரதேசத்தில் மட்டும் 13 வயதுக்கு உட்பட்ட 35 மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றார்கள். அவர்களில் 7 பேர்தான் பாடசாலைக்குச் செல்கின்றார்கள். அந்த 7 பேருக்காகவும், ஆசிரியர் ஒருவர் இருக்கின்றார். கதவு எல்லாம் மூடிக்கட்டிய அறைதான் அவர்களுடைய வகுப்பறை. இப்படியாயின் எவ்வாறு எங்களுடைய மாற்றுத்திறனாளி சிறுவர்களின் எதிர்காலத்தை சுபீட்சமாக்குவது?

பாடசாலை சமூகம் அதற்கு முன்வர வேண்டும் என்று கேட்டால், அவர்களுக்கு அந்த மாற்றாற்றல் கொண்ட சிறுவர்கள் பற்றி போதிய தெளிவுபடுத்தல் இல்லையாம். கல்வித் திட்டத்தில் ஒருங்கிணைந்த கல்வித்திட்டம் இருக்கின்றது என்று எல்லோரும் சொல்லுகின்றார்கள். உட்படுத்தல் கல்வித் திட்டம் இருந்தும், அந்த கல்வித்திட்டத்தை அனுபவிக்கின்ற வாய்ப்பு இந்த சிறு குழந்தைகளிடம் இருந்து பறிக்கப்பட்டிருக்கின்றது. அவர்கள் பாடசாலைக்குச் செல்ல முடியாத சூழல் இருக்கின்றது. அவர்களை ஊக்கப்படுத்துவதற்கு யார் இருக்கின்றார்கள்? அதற்குப் பொறுப்பு கூறுவது யார்? அரசாங்கம் இதனைச் செய்ய வேண்டும் என்றால், அரசாங்கத்திற்கு இதனைக் கரிசனை கொள்ளுமாறு கேட்பதற்கு யார் இருக்கின்றார்கள்? அதை நாங்கள் கேட்க வேண்டும்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More