குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
கொழும்பு மாநகர சபை முதல்வர் மற்றும் உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகின்ற சலுகைகள் யாழ் மாநகர சபை முதல்வர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈழ மக்கள் ஐனநாயக கட்சி ஆகியன எதிர்ப்பு தெரிவித்துள்ளது யாழ் மாநகர சபையின் ஆறாவது அமர்வு மாநகர மண்டபத்தில் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதன் போது முதல்வரின் பயணங்களுக்கான வாகனங்கள் குறித்து சபையில் சர்ச்சகைள் ஏற்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து உறுப்பினர்களுக்கான படிகள் குறித்து உறுப்பினர் தர்சானந்த் சபையில் கேள்வியெழுப்பினார்.
அதாவது கொழும்பு மாநகர சபையில் சம்பளத்துடன் சேர்த்து தொலை பேசி , போக்குவரத்து மற்றும் முத்திரைச் செலவுக்கு என ஒதுக்கீடுகள் வழங்கப்படுகின்றன. அதனை ஏன் எமக்கு இங்கு வழங்குவதில்லை என ஆணையாளரிடம் கேட்டிருந்தார்.
அவ்வாறு வழங்குவதற்கான சுற்று நிருபம் இல்லை என்றும் அது குறித்து நீங்கள் எங்களிடம் கேட்பதை விடுத்து ஒரு தீர்மானமாக நிறைவேற்றுங்கள் அதனை நாங்கள் உரிய இடங்களுக்கு அனுப்பி அதற்குப் பதிலளிக்கின்றோம் என ஆணையாளரும் சபைச் செயலாளரும் பதிலளித்திருந்தனர்.
இதன் போது எழுந்த முன்னணியின் உறுப்பினர் மணிவண்ணண் சலுகைகளுக்கு நாங்கள் ஆதரவை வழங்க முடியாது. இந்த விடயத்திற்கு நாங்கள் எங்களது எதிர்ப்பையே வெளிப்படுத்துகிறோம் என்ற கூறினார்.
இதன் பின்னர் பேசி முன்னணியின் உறுப்பினர் பார்த்தீபன் கொழும்பு மக்களின் வாழ்க்கைத் தரத்தையுமும் எமது மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் பார்க்க வேண்டும் என்றும் கொழும்பு மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருப்பது போன்று எமது மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்த பின்னர் இது குறித்து பேசலாம் என்றார்.
இதனையடுத்து குறித்த விடயத்தை பிரேரனையாக முன்மொழிந்த தர்சானந் இங்கு சிலர் இதனை எதிர்ப்பதாலும் அதே நேரம் பலரும் ஆதரிப்பதாலும் வாக்கெடுப்பிற்கு விட வேண்டுமென்று கோரினார்.
அதற்கு பதிலளித்த முன்னணி மற்றும் ஈபிடிபி ஆகிய கட்சிகள் தாங்கள் இதனை எதிர்ப்பதாகவும் இப்போதைக்கு இது தேவையில்லை என்று கூறியிருந்தன. இதே வேளை கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.