குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாப்பாமோட்டை மற்றும் ஆக்காட்டிவெளி ஆகிய இரு கிராமங்களிலும் மக்கள் குடியிருப்புக்கு அருகில் அமைந்துள்ள கள்ளு விற்பனை நிலையங்களை அவ்விடத்தில் இருந்து அகற்றுமாறும், குறித்த பிரதேசத்தில் போத்தல் கள்ளு விற்பனையை முற்றாக தடை செய்யக் கோரியும் குறித்த இரு கிராம மக்களும் இணைந்து இன்று புதன் கிழமை (1) காலை பேரணி ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
காலை 10 மணியளவில் நெடுங்கண்டல் பிரதான வீதியில் தமது பேரணியை ஆரம்பித்தனர். இதன் போது கலந்து கொண்ட மக்கள் பாப்பாமோட்டை மற்றும் ஆக்காட்டிவெளி ஆகிய இரு கிராமங்களிலும் மக்கள் குடியிருப்புக்கு அருகில் அமைந்துள்ள கள்ளு விற்பனை நிலையங்களை அவ்விடத்தில் இருந்து அகற்றுமாறும், போத்தல் கள்ளு விற்பனையை முற்றாக தடை செய்யக் கோரியும் கோசங்களை எழுப்பியவாறு பேரணியில் கலந்து கொண்டனர்.
-குறித்த பேரணியானது பிரதான வீதியூடாக சென்று மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தை சென்றடைந்தது. -பின்னர் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை மாந்தை மேற்கு பிரதேசச் செயலக நிர்வாக அலுவலகர் எம்.ஆர்.எம்.கஜீத்திடம் கையளித்தனர்.
-குறித்த பேரணியில் பாப்பாமோட்டை மற்றும் ஆக்காட்டிவெளி கிராம மக்கள்,பிரதேச சபை உறுப்பினர்கள்,பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.