யாழ்ப்பாணத்தின் ஒல்லாந்தர் கோட்டையினை, இராணுவம் கையகப்படுத்த முனைவதாக வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என இராணுவ கட்டளை தளபதி மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்திற்கான பயணம் ஒன்றினை மேற்கொண்டுள்ள இராணுவத் தளபதி மஹேஷ் சேனாநாயக்க, யாழ். ஒல்லாந்தர் கோட்டையினை இன்று (01.08.18) நேரில் சென்று பார்வையிட்டதுடன், அங்குள்ள நிலவரங்கள் தொடர்பிலும் ஆராய்ந்தார்.
கோட்டையினை இராணுவம் கையகப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டு வருவதுடன் இராணுவத்திற்கு எதிராக அண்மைக் காலமாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில் இராணுவத் தளபதி யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்துள்ளார்.
இதன் போது போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், யாழ். ஒல்லாந்தர் கோட்டையை இராணுவம் கையகப்படுத்துவதாக தெரிவிப்பதில் எவ்வித உண்மையும் இல்லை. யாழ். நகர மக்களின் பாதுகாப்பின் நிமித்தம் கடந்த 25 வருடங்களிற்கும் மேலாக சிறு அளவிலான இராணுவத்தினர் கோட்டையில் இருந்து வருவதாக அவர் குறிப்பிட்டதுடன் இது நாட்டின் எல்லா பகுதிகளிலும் உள்ள ஒரு சாதாரண நடவடிக்கை என்றும் குறிப்பிட்டார்.
அதேவேளை, எந்நேரத்திலும் கோட்டைக்குள் பொதுமக்கள் வந்து செல்ல முழு சுதந்திரம் உண்டு எனவும், பொது மக்கள் கோட்டையை பார்வையிடுவதற்கு இராணுவம் எந்த விதத்திலும் தடையாக இருக்க மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை இராணுவத்தினரிடம் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்கும் செயற்பாடு குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இராணுவ தளபதி, விரைவில் மேலும் சிறிய அளவில் நிலங்களை விடுவிக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.