குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்குமாறு கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் விடுத்துள்ள கோரிக்கை சம்பந்தமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் அமைச்சர் மகிந்த அமரவீரவின் நிலைப்பாட்டை அறிய தருமாறு கோரி, சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
ஒரு கட்சியின் சார்பில் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அல்லது சில அணிகள் இணைந்து தாம் விரும்பிய நாடாளுமன்ற உறுப்பினரை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு கோரிக்கை விடுக்க முடியும். அப்படியான கோரிக்கை விடுக்கப்படும் போது, குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவான கட்சியின் அதிகாரபூர்வமான நிலைப்பாடு என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டியது சபாநாயகரின் கடமை என சபாநாயகரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவான ஒரு அணியினர் கூட்டு எதிர்க்கட்சி என்ற பெயரில் தனித்து செயற்பட்டு வருகின்றனர். அந்த முன்னணியில் தெரிவான ஒரு அணியினர் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றனர்.ஐக்கிய தேசியக்கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியவற்றுக்கு அடுத்து அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கூட்டு எதிர்க்கட்சியில் 70 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதால், அதன் நாடாளுமன்ற குழு தலைவரான தினேஷ் குணவர்தனவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் எனக் கோரி, 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு கடந்த 30 ஆம் திகதி சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கடிதம் ஒன்றை கையளித்தனர்.இதற்கு அமைய குறித்த 70 பேர் நாடாளுமன்றத்திற்கு தெரிவாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிலைப்பாட்டை அறிய, அந்த முன்னணியின் செயலாளருக்கு சபாநாயகர் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.