குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
போதைப் பொருள் கடத்தல் தொடர்பான விசாரணை அதிகாரத்தை இராணுவத்திற்கு வழங்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம், நாட்டை இராணுவமயப்படுத்தும் முதலாவது நடவடிக்கை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். காவற்துறை அதிகாரங்கள் இராணுவத்திற்கு வழங்குவதை எதிர்த்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கொழும்பு விகாரமஹாதேவி வெளியரங்கில், கூட்டு எதிர்க்கட்சி அரசாங்கத்திற்கு எதிராக ஏற்பாடு செய்திருந்த ஜனபல சேனா என்ற தலைப்பிலான பொதுக் கூட்டத்தில் நேற்று (02.08.18) உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் எதிர்ப்பு பேரணி ஆரம்பமாகி, விகாரமஹாதேவி வெளி அரங்கிற்கு அருகில் முடிவடைந்ததுடன் அங்கு பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது.இராணுவத்திற்கு காவற்துறை அதிகாரங்களை வழங்க போகின்றனர். மிகவும் பயங்கரமான ஒன்றை செய்ய பார்க்கின்றனர்.
போதைப் பொருள், கொலைகள் என்பன அதிகரித்துள்ளன எனக் கூறி விசாரணைகளை நடத்தும் அதிகாரத்தை இராணுவத்திற்கு வழங்க போகின்றனர். குடும்ப பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாக கூறி, அது தொடர்பான விசாரணைகளையும் இராணுவத்திடம் வழங்குவார்கள். இதுதான் இராணுவமயப்படுத்தலின் முதல் நடவடிக்கை.அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு இடமளிப்பார்களான என கேள்வி எழுப்புகிறேன்.
நீதிமன்றத்தை பயன்படுத்தி அரசாங்கம் எதிர்க்கட்சியை அடக்க முயற்சித்து வருகிறது என குற்றம் சுமத்தியுள்ள மகிந்த ராஜபக்ச, ஊழல், மோசடிகள் குறித்து விசாரிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள விசேட நீதிமன்றத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.இந்த நீதிமன்றத்திற்கான வழக்குகளை அமைச்சர்கள் கூடிய தெரிவு செய்கின்றனர். நீதித்துறையை கட்டுப்படுத்தவும் அரசாங்கம் தயாராகி வருகிறது. இதற்கு எதிராக நீதிபதிகள் பேச ஆரம்பித்துள்ளனர்.
அரசாங்கம் நாட்டின் நிலத்தை விற்பனை செய்து வருகிறது. இந்த அரசாங்கம் விற்பனை செய்யும் எதனையும் கொள்வனவு செய்ய வேண்டாம் என சர்வதேசத்திடம் கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர், விற்பனை செய்யப்பட்டவற்றை திரும்ப பெறுவது குறித்து நாங்கள் கவனம் செலுத்துவோம் எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.