Home இலங்கை “சும்மா தாறாங்கள் எண்டிட்டு எல்லாத்தையும் வாங்கக்குடாது” – சனி முழுக்கு – 2

“சும்மா தாறாங்கள் எண்டிட்டு எல்லாத்தையும் வாங்கக்குடாது” – சனி முழுக்கு – 2

by admin

“பொஸிற்றிவ்” பொன்னம்பலம்

சும்மா தாறாங்கள் எண்டிட்டு எல்லாத்தையும் வாங்கக்குடாது எண்டதுக்கு எங்கடை சுப்புறுவின்ரை கதை ஒண்டு இருக்கு. போன கிழமை சுப்புறுவின்ரை பெறாமகன் ஒருத்தன் சுவிஸிலை இருந்து வந்து தாயோடை நிண்டவன். அவன் சுவிஸிலை இருந்தெல்லே வந்திருக்கிறான்? சுப்புறு பாத்திது ஒரு நாளைக்கு  அவனைக் கூப்பிட்டு மீனைக் கீனை வாங்கிச் சாப்பாடு குடுப்பம் எண்டு . மற்ற நாள் மதியம் சாப்பாட்டுக்குக் கூப்பிட்டவர். ஒரு  லீற்றர் சோடாப் போத்தில்லை பனையுக்கும் சொல்லிப்போட்டு, அப்பிடியே சாவக்காட்டிலை மீனையும் வேண்டிக் கொண்டு வந்து குடுத்திட்டு நிக்க ,  சுப்புறுவின்ரை மனுசி சுப்புறுவைக் கூப்பிட்டுச் சொல்லிச்சிது குடிக்கிற தண்ணி முடிஞ்சிது வயிரவர் கோயிலடிக் கிணத்திலை போய் தண்ணி அள்ளிக் கொண்டு வாங்கோவன் எண்டு. சுன்னாகம் பவர் ஸ்ரேசன் ஒயில் கிணறுகளிலை கலக்கத் துவங்கினாப் பிறகு, என்னத்துக்கு இல்லாட்டிலும் குடிக்க எண்டு வயிரவரடித் தண்ணியைத்தான் எல்லாரும் அள்ளிக் குடிக்கிறது. அப்ப சுப்புறுவும் வழமையாப் போற மாதிரி 5லீட்டர் தண்ணிக் கானையும் எடுத்துக் கொண்டு தண்ணியள்ளப் போனவர்.போனவர் தண்ணியை அள்ளிக் கொண்டு நல்ல பிள்ளை மாதிரி வீட்டை வரவெல்லோ வேணும். ஆசை ஆரை விட்டிது?

இதுக்கிடையிலை சுப்புறுவுக்கு இருக்கிற சீனி  வருத்தத்தைப் பற்றியும் கொஞ்சம் சொல்லவேணும். ஒரு நாள் இறைக்க எண்டிட்டு சுப்புறு மிஷினையுங் கொண்டு தோட்டப் பக்கம் போனதுதான் தெரியும். கொஞ்ச நேரத்திலை தண்ணி கட்டிறவன் ஆத்துப் பறந்து ஓடி வந்தான். என்னடா எண்டு கேட்டதுக்கு சுப்புறுத் தம்பி வாய்க்காலுக்கை மயங்கி விழுந்து ஓட்டோ ஒண்டிலை ஆஸ்பத்திரி காணக் கொண்டு போயினம் உங்களை வரட்டாம்” எண்டு சொன்னதுதான் தாமதம் சுப்புறுவின்ரை மனுசி வீட்டிலை நிண்ட றேசின் கவுணோடை “ஐயோ” எண்டு குளறிக் கொண்டு ஓடிப்போனால் வாயுக்கை, மூக்குக்கை எல்லாம் வயருகள் செருகினபடி சுப்புறுவை மல்லாத்திக் கிடத்திக்கிடக்காம். அதைக் கண்ட மனுசி வாட்டிலை வருத்தக்காரர் கிடக்கினமெண்டும் பாராமல் நிலத்திலை விழுந்து பிரண்டு ஒப்பாரி வைக்க, மிஸிமார் வந்து நல்ல பேச்சு. பிறகு சுப்புறுவின்ரை மனிசீன்ரை அழுகை ஓயவிட்டில்அவவுக்கு  விவரத்தைச் சொல்லி, ஆளுக்கு ஒண்டும் இல்லை. இரத்தத்திலை சீனி கூடிப்போச்சு. அவ்வளவுதான், நாளைக்குத் துண்டு வெட்டிவிடுறம். கொஞ்ச நாளைக்கு ஆளைப் பக்குவமாப் பாத்துக் கொள்ளுங்கோ. சீனி உள்ள சாப்பாடு, மாச்சாப்பாடு, பாண் ஒண்டும் குடுக்காதையுங்கோ எண்டு மருந்தையுங் குடுத்து, சாப்பாடு இன்னதெண்டதையும் எழுதிக் குடுத்து ஆளை விட்டிட்டினம். அப்ப மனுசியும் கவனம்.கண்டபடி ஒண்டுங் குடுக்கிறேல்லை. பத்தியம் மாதிரித்தான்.நாங்கள் சுப்புறுவை வைச்சு லோட்டிக் கட்டுவம். என்னெண்டால் சுப்புறுவை நடுவிலை இருத்தி வைச்சுத் தொட்டுக் கொண்டு வெறுந் தேத்தண்ணிக் குடிக்கலாம். சீனி தேவை இல்லை எண்டு.

அப்ப சுப்புறு தண்ணி அள்ளப் போனனி உன்ரை பாட்டிலை தண்ணியைக் கொண்டு வரவெல்லோ வேணும். சுப்புறுவின்ரை கயிட்ட காலத்துக்கு வயிரவற்றை அபிஷேகம் முடிஞ்சு அங்கை கோயிலிலை எடுபிடி வேலைசெய்யிற ஆள்  பஞ்சாமிர்தச் சட்டியோடை நிண்டுகொண்டு “சுப்புறு அண்ணை, பஞ்சாமிர்தம் ” எண்டு சொல்ல, சுப்புறு “வேண்டாம். எனக்குச் சீனி வருத்தம்” எண்டு மறுமொழி சொல்ல, “இது பிரசாதம். வேண்டாம் எண்டு சொல்லப்பிடாது. கொஞ்சத்தைப் பிடி அண்ணை” எண்டு எடுபிடி வற்புறுத்த, “ஐயோ டாக்குத்தர் பேசுவர்” எண்டு சுப்புற வீச்சா நடக்க, “ஒரு எப்பனை நாக்கிலை நனைச்சுக் கொண்டு போ.” எண்டு எடுபிடி விட்டுக் கலைக்க, “ஐயோ மனுசி பேசும். வேண்டாம்” எண்டு பிறகும் சுப்புறு  அடம்பிடிக்க, அங்கை நிண்ட ஒண்டு சொல்லிச்சுதாம், “அவன்(எடுபிடி) கலைச்சுக் கலைச்சுக் கேக்கிறதிலை ஏதோ ஒரு அருள் இருக்கு. சிலவேளை உதைத் திண்டால் சீனி வருத்தம் முற்றா இல்லாமல் போவிடும் போலை. இந்த வயிரவர் லேசுப்பட்ட ஆள் இல்லை. ஆனபடியால்  சுப்புறு வாங்கித் தின்  எண்டு ” சொல்ல ஒரு கையடங்கல் பஞ்சாமிர்தத்தைச் சுப்புறு வேண்டிக் கொண்டு போய்த் தேர் முட்டியடியிலை வைச்சு நல்லா அதக்கிப் போட்டு வீட்டை போனதுதான் தெரியும்…!

சுப்புறுவைக்  கிறுதி தூக்கி எறிஞ்சு மண்டையும் லேசா கட்டிலோடை அடிபட்டு இரத்தம் சொட்டச் சொட்ட ஒரு ஓட்டோவிலை ஏத்திக் கொண்டு பெரியாஸ்பத்திரியிலை சேத்தினம். ஆளின்ரை உடம்பிலை, வேட்டி சால்வையிலை எல்லாம் பிலாப்பழ வாசம். டாக்குத்தருக்குத் தெரிஞ்சு போச்சு மச்சான் பிலாப் பழத்தை முழுசா விழுங்கிப் போட்டு வந்திருக்கிறார் எண்டு. “இதுதான் முதலும் கடைசியும். சீனி வருத்தம் இருக்கிது எண்டு தெரிஞ்சு கொண்டு பிலாப்பழம் திண்டவருக்கு இஞ்சை இனிமேல் “ற்ரீட்மன்ட் ”  இல்லை, தெரிஞ்சிதோ?” எண்டு எல்லாற்றை முன்னாலையும் சுப்புறுவின்ரை மனிசியை டொக்டர் பரிசுகெடுத்துப் போட்டாராம். அப்ப சுப்புறு தண்ணியள்ளப்போன வேலையை மட்டும் பாத்துக்கொண்டு வந்திருந்தால் தப்பி இருப்பர். இது வீணாத் தேவை இல்லாத வேலையைப் பாக்கப்போய் பெறாமேனுக்கு வைச்ச கள்ளுப்பாட்டியும் குழம்பி மற்ற நாள் புளிச்ச கள்ளை எடுத்துது் தூர எறிஞ்சவையாம். அதோடை சுப்புறுவின்ரை மனுசி பதறிப் பட்டுக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடிப்போனாப்போலை குசினிக் கதவைப் பூட்ட மறந்து போனாவாம். அப்ப பொரிச்சு வைச்ச மீனைப் பூனை பதம்பாத்ததுதான் மிச்சம்.

உதுக்குத்தான் சொல்லுறது சும்மா தருகினமெண்டிட்டு வாங்கப்பிடாது எண்டு. அப்பிடி தாறவை பிடியாப் பிடிச்சுத் தந்தாலும் அது எங்களுக்குப் பொருத்தமானதோ இல்லாட்டித் தேவையானதொண்டோ எண்டு ஆற இருந்து யோசிக்க வேணும். என்ன?

உப்பிடித்தான் கந்தையன்ரை பேரன் பேத்தி ஜேர்மனியிலை இருந்து வந்து நிண்டவை.போகேக்கை தாங்கள் கொண்டு வந்த இரண்டு மாட்டு சூட்கேஸையும், அங்கை சமறிலை போட்ட  “கிழிஞ்சு கந்தலாப்போனதைப் போலை தொங்கிக் கொண்டு கிடக்கிற” உடுப்புகளையும் விட்டிட்டுப் போட்டினம். சூட்கேஸை நிலத்திலை வைக்க இடமில்லாமல் பரண் கட்ட கந்தையாவுக்கு இரண்டாயிரம் செலவாம்.

அதோடை இஞ்சை இருக்கிற கந்தையன்ரை பேத்தி அவை விட்டிட்டுப் போன அந்த மேற்சட்டையைப் போட்டுக் கொண்டு நெஞ்சு தெரியத் திரிய வெறியோடை வந்த பூமணியின்ரை பெடி அதைப் பாத்து புளங்காகிதப் பட்டு அவளைக்  கட்டிப் பிடிச்சு அசிங்கப் படுத்திப் போட்டானாம். வெறியிலை வந்தவனுக்குச் செய்யிறது எது, செய்யப்பிடாதது எது எண்டு தெரியுமோ? சொந்தத்துக்கை நடந்ததெண்டபடியாலை பொலிஸுக்குப் போகேலுமோ? அப்பிடியே விசியத்தை  வீட்டுக்கை சடைஞ்சாச்சு.

அந்த நிமிசமே கந்தையன் அவையின்ரை உடுப்பையெல்லாம் எடுத்து முத்தத்தலை போட்டுக்  காவோலையாலை மூடிக்  கொளுத்திப் போட்டான். அப்ப சும்மா தந்ததெண்டதாலை எத்தினை வில்லங்கம் தெரியுமோ? அதுகும் தங்களுக்குத் தோதில்லாததுகளை ஆர் தந்தாலும் ஓசி எண்டிட்டு வேண்டப்பிடாது.  எல்லாத்தையம் பொசுற்றிவ்வா யோசிக்க வேணும். என்ன? ஏன்  அப்பிடி யோசிக்க வேணும் எண்டு அடுத்த சனிக்கிழமை சொல்லுறன் ..!

  • “பொஸிற்றிவ்” பொன்னம்பலம்

Spread the love
 
 
      

Related News

1 comment

JP August 4, 2018 - 12:41 pm

நல்லா தான் எழுதுறிங்க பொஸிற்றிவ் பொன்னம்பலம்

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More