அடுத்த தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மூலமாகவே மஹிந்த ராஜபக்க்ஸ பிரதமராவார் என்று பொது எதிரணி உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
அத்துடன் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஆட்சியில் இருந்து வெளியேற்றி மீண்டும் எமது தனி அரசாங்கத்தை அமைப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைக்கும் எந்த அரசியல் தீர்வு யோசனைகளையும் பெரும்பான்மை மக்கள் நம்ப மாட்டார்கள். மைத்திரி – மஹிந்த இணைந்து முன்னெடுக்கும் தீர்வு நகர்வுகளிலேயே நம்பிக்கை ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அரசாங்கத்தை வீழ்த்த பொது எதிரணியாக நாம் முன்னெடுத்துள்ள போராட்டம் வெற்றியடைந்துள்ளதுடன் அடுத்த கட்டங்களில் நாம் முன்னெடுக்கும் போரட்டங்களுக்கு இது நல்லதொரு ஆரம்பமாக அமையும் என்றும் டிலான் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரி மத்திய வங்கி பிணைமுறி ஊழல் குற்றவாளிகளை இன்னும் தண்டிக்கவில்லை, புதிய அரசியல் அமைப்பு திருட்டுத்தனமாக முன்னெடுக்கபட்டு வருகின்றது. மக்களின் வாழ்வாதார பிரச்சினைகள் அதிகரிப்பு விலை அதிகரிப்பு, வரி அதிகரிப்பு என்ற விடயங்களுக்கு இன்னமும் தீர்வினை பெற்றுக் கொடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் அடுத்த தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மூலமாகவே மஹிந்த ராஜபக்ஸ பிரதமராவார். அது உறுதியாக நடைபெறும். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாக நாம் மீண்டும் ஒன்றிணைந்து ஐக்கிய தேசியக் கட்சியை எதிர்க்கட்சியாக்குவோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.