மீள் குடியேறியுள்ள முள்ளிக்குளம் கிராம மக்களை மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் நேற்று ஞாயிற்றுக்கிழமை (5) மாலை நேரடியாக சென்று பார்வையிட்டார்.
கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து மக்களின் போராட்டங்களின் பின் விடுவிக்கப்பட்ட முள்ளிக்குளம் மக்களின் காணிகளுக்கு சுமார் ஒரு வருடங்களின் பின் கடந்த மாதம் 18 திகதி அந்த மக்கள் சென்றனர்.
இந்த நிலையில் அங்கு சென்ற மக்கள் எவ்வித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் அங்கு வாழ்ந்து வந்தனர்.பாராளுமன்ற உறுப்பினர்கள்,வடமாகாண அமைச்சர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் அங்கு சென்று மக்களை பார்வையிட்டதோடு, அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.
கடந்த 28 ஆம் திகதி மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் நேரடியாக சென்று பார்வையிட்டதோடு நிலமைகளை அவதானித்ததோடு முதற்பட்டமாக தரப்பால்களையும் வழங்கி வைத்தார்.
இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (5) மாலை மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் முள்ளிக்குளம் கிராமத்திற்குச் சென்று மக்களை பார்வையிட்டதோடு முள்ளிக்குளம் பங்குத்தந்தை லோரன்ஸ் லியோ அவர்களுடனும் கலந்துரையாடினார். இதன் போது நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர்களான அ.றொஜன் மற்றும் ஜீவன் ஆகியோரும் சென்றிருந்தனர்.
இதன் போது மக்களின் பிரச்சினைகளை கேட்டடு அறிந்து கொண்ட பிரதி அமைச்சர் முதற்கட்டமாக அவசர பணிகளை தனது அமைச்சினூடாக முன்னெடுப்பதாகவும், வீடமைப்பு மற்றும் நிர்மானத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவுடன் கலந்துரையாடி வீட்டுத்திட்டங்களை கொண்டுவர நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாகவும் உறுதியளித்துள்ளார்.