குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
யாழ். சண்டிலிப்பாய் சீரணி அம்மன் ஆலயத்திற்கு பின்புறமாக சடலம் நல்லடக்கம் செய்வதற்கு மல்லாகம் நீதிவான் அனுமதி அளித்துள்ளார். குறித்த ஆலயத்தின் தர்மகர்த்தாவான தம்பையா பரம்சோதி கடந்த வியாழக்கிழமை உயிரிழந்திருந்தார். அவரின் சடலத்தை ஆலயத்திற்கு பின் புறமாக நல்லடக்கம் செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதற்கு ஆலயத்திற்கு அருகில் குடிமனைகள் உள்ளன எனவும் , ஆலய குருக்களின் வீடும் இருக்கின்றது எனவும் அதனால் அப்பகுதியில் சடலம் நல்லடக்கம் செய்வது பொருத்தமற்றது. என வலி.தென் மேற்கு பிரதேச சபைக்கு முறைப்பாடு செய்யப்பட்டது. குறித்த முறைப்பாடு தொடர்பில் பிரதேச சபையினால், மானிப்பாய் காவற்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது. தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு சென்ற காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து, அது குறித்து மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவானுக்கு பரப்படுத்தினார்கள்.
அது தொடர்பில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விசாரணைகளை நீதவான் முன்னெடுத்த போது உயிரிழந்தவரின் உறவினர்கள் , “உயிரிழந்த தர்மகர்த்தாவின் உறவினர்கள் இருவரின் உடல்கள் ஆலயத்திற்கு பின்புறமாக நல்லடக்கம் செய்யப்பட்டு, சமாதி கட்டப்பட்டு உள்ளது” என தெரிவித்தனர். அது தொடர்பில் ஆராய்ந்த நீதிவான் சடலத்தை நல்லடக்கம் செய்ய அனுமதி அளித்தார்.