குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் நேற்று திங்கட்கிழமை (6.08.18) மதியம் 1.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடாத்தில் இடம் பெற்ற போது வடமாகாண அமைச்சர்கள் இருவர் குறித்த கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளமை தெரிய வந்துள்ளது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் ஏற்பாட்டில் இணைத்தலைவர்களான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அமைச்சர் றிஸாட் பதியுதீன், பிரதி அமைச்சர் கே.கே.மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், ஆகியோரின் இணைத்தலைமையில் இந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இடம் பெற்றது.
இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள்,பிரதேசச் செயலாளர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், திணைக்கள தலைவர்கள், பொலிஸ் கடற்படை உயர் அதிகாரிகள்,மீனவ,விவசாய அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர் வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் மற்றும் வடக்கு விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் ஆகியோர் மண்டபத்தினுள் பிரவேசித்தனர். எனினும் பல தரப்பட்டவர்களுக்கும் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்த போதும்,குறித்த இரு அமைச்சர்களுக்கும் ஆசனங்கள் ஒதுக்கப்படவில்லை. இந்த நிலையில் இவ்விரு அமைச்சர்களும் கூட்டத்தில் இருந்து வெளி நடப்பு செய்துள்ளதாக தெரிய வருகின்றது.